Sunday, December 30, 2018

முஸ்லிம் சட்டத்தில் உயில்

Image may contain: text
முஸ்லிம் சட்டத்தில்  உயில்
 'வசிய்யத்
முஸ்லிம் சட்டத்தில் 'வசிய்யத்' என்பது உயில் அல்லது மரண சாசனம் என்று அழைக்கப்படுகிறது. கொடையாக ஒரு பொருளை கொடுக்கும் பொழுது, கொடைப் பொருள் உடனடியாக கைமாற வேண்டும். ஆனால் வசிய்யதில் கொடுப்பவர் இறந்த பின்னரே 'உயில் சொத்து' பெறுபவர் கைக்கு வந்து சேரும். சொத்து கைமாறும் பொழுது கொடுப்பவர் உயிருடன் இருப்பதில்லை. ஆனால் கொடையில் கொடுப்பவரும், பெறுபவரும் உயிருடன் இருக்க வேண்டும். 
உயில் வழிச் சொத்து
உயில் வழிச் சொத்து கொடுக்கும் பொழுது, கொடுப்பவர் இறந்திருக்க வேண்டும். அவர் இறந்த பின்னரே' உயில்' நடைமுறைக்கு வருகிறது. அப்பொழுதுதான் அச்சொத்து பெறுபவருக்கு வந்து சேரும். உயில் வழிச் சொத்து பெறுபவரை உயில்வழிக் கொடை பெறுபவர் (Legatee) என்றும், எழுதி வைப்பவரை உயில் எழுதி வைப்பவர் (Testator) என்றும் அழைக்கப்படுகிறார்கள். உயிலை எழுதி வைப்பவர் இறக்கும்வரை பெறுபவருக்கு சொத்துக்களில் எந்த உரிமையும் ஏற்படாது. உயிலை எழுதி வைப்பவருக்கு அதனை ரத்து செய்யவும் அதிகாரம் உண்டு. உயில் எழுதி வைப்பவரின் இறப்பிற்கு பின்னரே நடைமுறைக்கு வரும்.இரண்டு கட்டுப்பாடு
ஒரு முஸ்லீம் உயில் எழுதுவது இரண்டு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.
1. தன்னுடைய முழு சொத்தில் 1/3 பங்குக்கு மிகாமல் தான் உயில் எழுதி வைக்க வேண்டும். மீதி 2/3 பாகமும் வாரிசுரிமை சட்டப்படி பாகம் பிரிக்கப்பட வேண்டும். கடன், இறுதிச் சடங்கு செலவு போக மீதமிருப்பதே அவர் விட்டுச் செல்லும் சொத்தாகும்.
2. தன்னுடைய முறையான உடனடி சொத்துரிமை பெறும் வாரிசுகளுக்கு உயில் மூலமாக சொத்து ஏதும் கொடுக்கக்கூடாது.
எடுத்துக்காட்டாக மனைவிக்கோ, மகனுக்கோ கொடுக்கக்கூடாது. ஆனால் மகனின் மகனுக்கு கொடுக்கலாம். மகன் நேரடி வாரிசு என்பதால் அவருக்கு உயில் எழுத முடியாது. ஆனால் பேரனுக்கு உயில் எழுதலாம்.
உயில் எழுத்து மூலமாகவோ, வாய்மொழியாகவோ கொடுக்கலாம். எந்தவித சம்பிரதாயச் சடங்குமின்றி ஒரு முஸ்லீம் உயில் எழுதி வைக்க முடியும். இந்தியாவில் உயிலின் சட்டம் பற்றி இந்திய வாரிசுரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. முஸ்லிம்கள், முஸ்லீம் சட்டப்படி உயில் எழுதி வைக்கலாம். ஆயினும் இந்திய வாரிசுரிமை சட்டத்தில் உள்ள பிரிவுகள் 316 - 331 முஸ்லிம்களுக்கும் பொருந்தும். இந்த சட்டப் பிரிவுகள் முஸ்லிம்களை கட்டுப்படுத்தும். ஒரு முஸ்லீம் எழுதி வைக்கும் உயில், சென்னை போன்ற மாநகரங்களில் வைத்து எழுதப்பட்டால் கட்டாயம் Probate செய்யப்பட வேண்டும்.
எழுத்து மூலமாக உயில் எழுதி வைக்கும் பொழுது, முத்திரைத்தாளில் எழுதி வைக்க வேண்டியதில்லை. விரும்பினால் பதிவு செய்து கொள்ளலாம். எழுதி வைத்தாலும், பதிவு செய்தாலும் நேரில் பார்த்த சாட்சிகள் மூலமாகத்தான் உயிலை நிரூபிக்க வேண்டும். ஆவணத்தில் எழுதி இருந்தாலும் கையெழுத்திட வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில சமயங்களில் தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தும் கடிதங்களும், குறிப்புகளும் கூட உயிலாக கருதப்பட்டிருக்கிறது. உயில் எழுதப்பட்ட பின்னர், அதனை திருத்தி எழுத வேண்டும் என்று அவருடைய வழக்கறிஞருக்கு கடிதம் எழுதி இருந்தால் அதை அந்த உயிலின் இணைப்பாக கருத வேண்டும். இதை கோடிசில் (Codicil) என்கிறார்கள். இது உயிலின் ஒரு பகுதியாக கருதப்படும். உயிலில் பெறுபவர் யார் என்பதை தெளிவாக சொல்லி இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment