Wednesday, December 5, 2018

ஊராட்சிகள் சட்டம், 1958

Image may contain: text
ஊராட்சிகள் சட்டம், 1958 
ஊராட்சி கூட்டங்களை கூட்ட ஏற்பாடு செய்வதுடன் அக்கூட்டங்களுக்கு தலைமை வகித்து நடத்துவதும் தலைவரின் கடமையாகும். ஊராட்சியில் பராமரிக்கப்படும் அனைத்து ஆவணங்களையும் எப்போதும் பார்வையிட தலைவருக்கு அதிகாரம் உண்டு. சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி அனைத்து கடமைகளையும், அதிகாரங்களையும் செயல்படுத்த தலைவருக்கு அதிகாரம் உண்டு என ஊராட்சிகள் சட்டம் பிரிவு 52(2) கூறுகிறது.
ஊராட்சி தலைவர் பதவி காலியாக இருந்தால், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில் அந்த தலைவர் பொறுப்பு முழுவதும், துணைத் தலைவரை சாரும் என பிரிவு 54(1) கூறுகிறது.
ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகள் காலியாக இருந்தாலோ அல்லது தலைவர் பதவி காலியாக இருந்து, துணைத் தலைவர் 30 நாட்களுக்கு மேல் ஊராட்சி பகுதியில் இல்லாமலிருக்கும் நிலை ஏற்பட்டாலோ அல்லது உடல்நலக் குறைவு காரணமாக 30 நாட்களுக்கு மேல் கடமையாற்ற முடியாத நிலைமையில் அவர் இருந்தாலோ, ஊராட்சி மன்றத் தலைவரின் பொறுப்பையும், கடமையையும் மீண்டும் தலைவரோ, துணைத் தலைவரோ ஏற்றுக் கொள்கின்ற வரையிலும் சம்மந்தப்பட்ட கோட்டாட்சியர் அந்தப் பொறுப்புகளை ஏற்று நிறைவேற்ற வேண்டும் என பிரிவு 54(2) கூறுகிறது. அந்த சமயங்களில் கோட்டாட்சியரே ஊராட்சியின் தலைவராக கருதப்படுவார்.
ஊராட்சி மன்ற தலைவர் தனது பொறுப்புகளில் சிலவற்றை தனது விருப்பத்தின் பேரில் துணைத்தலைவர் வசம் எழுத்து மூலமாக ஒப்படை செய்யலாம். ஆனால் ஏதாவது பொறுப்பினையோ, அதிகாரத்தினையோ விட்டுக் கொடுக்க முடியாது என்று ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தால் துணைத் தலைவர் வசம் ஒப்படைக்க முடியாது என பிரிவு 54(4) கூறுகிறது.
ஊராட்சி மன்ற தலைவர் 30 தினங்களுக்கு மேல் தொடர்ச்சியாக ஊராட்சி பகுதியில் இல்லாமல் இருந்தாலோ அல்லது உடல்நலக்குறைவு காரணமாக 30 தினங்களுக்கு மேல் கடமையை செய்ய முடியாத நிலைமையில் இருந்தாலோ அப்போது அவர் பொறுப்பும், கடமையும் துணைத் தலைவரை சாரும் என பிரிவு 54(5) கூறுகிறது.
ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவி காலியாக இருந்தாலோ, 30 தினங்களுக்கு மேல் அவர் ஊராட்சி பகுதியில் இல்லாமல் இருந்தாலோ அல்லது உடல்நலக்குறைவு காரணமாக 30 தினங்களுக்கு மேல் தனது கடமையை செய்ய முடியாத நிலையிலிருந்தாலோ தலைவர் தமது அதிகாரங்களில் சிலவற்றை ஏதாவது ஒரு உறுப்பினர் வசம் ஒப்படைக்கலாம். அவ்வாறு அதிகாரம் பெறும் உறுப்பினர் " தலைவர் டெலிகேட்" என்று அழைக்கப்படுவார் என பிரிவு 54(6) கூறுகிறது.

No comments:

Post a Comment