Tuesday, December 18, 2018

காசோலை வழக்கு

சந்தோஷ் என்பவர் கடனை திருப்பி செலுத்தும் விதமாக நந்தகுமார் என்பவருக்கு ரூ. 28 லட்சத்திற்கு காசோலை ஒன்றை 1.11.2013 ஆம் தேதியிட்டு கொடுத்தார். அந்த காசோலை தேதிக்கு முன்பாக ரூ. 6 லட்சத்தை சந்தோஷ், நந்தகுமாருக்கு வழங்கினார். பாக்கி ரூ. 22 லட்சத்தை சந்தோஷ் தரவில்லை. அதனால் நந்தகுமார் சந்தோஷ் கொடுத்த காசோலையை வங்கியில் செலுத்தினார். பணமில்லாமல் அந்த காசோலை திருப்பப்பட்டது. பின்னர் நந்தகுமார் பாக்கி தொகை ரூ. 22 லட்சத்தை திருப்பி தர வேண்டும் என்று கேட்டு ஒரு அறிவிப்பை சந்தோஷ்க்கு அனுப்பினார். அந்த அறிவிப்புக்கு தான் பணம் ஏதும் தர வேண்டியதில்லை என்று கூறி சந்தோஷ் பதில் அறிவிப்பு கொடுத்தார். அதனால் நந்தகுமார் ஒரு காசோலை மோசடி வழக்கை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கேரளா உயர்நீதிமன்றத்தில் சந்தோஷ் மனுத்தாக்கல் செய்தார். அதற்கு காரணமாக 6 லட்சத்தை நந்தகுமார் பெற்றுக் கொண்டிருக்கிறார். தான் வேறு பணம் ஏதும் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் நந்தகுமார் ரூ. 20 லட்சத்திற்குமான காசோலையை வசூலுக்கு தாக்கல் செய்துள்ளார். எனவே அந்த காசோலையின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்துள்ளது சட்டத்திற்கு விரோதமானது என்று கூறியிருந்தார்.
நந்தகுமார் தரப்பில், பாக்கி பணத்திற்காக தான் வழக்கு தாக்கல் செய்துள்ளோம் எனவே காசோலை மோசடி வழக்கு சட்டப்படி சரியானது தான் என்று கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி.....முன் தேதியிட்டு ஒரு காசோலை கொடுக்கப்பட்டு, அந்த காசோலை கொடுக்கப்பட்ட தேதிக்கு முன்பாக அந்த காசோலை வங்கியில் பணம் பெறுவதற்காக செலுத்தப்படும் நாளிற்கு முன்பாக, அந்த காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையில், ஒரு பகுதியை காசோலை கொடுத்தவர் அளித்துள்ள நிலையில் மீதமுள்ள தொகைக்காக அந்த காசோலையின் அடிப்படையில் மா. ஆ. ச. பிரிவு 138 ன் கீழ் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் அந்த வழக்கு ஏற்புடைய ஒன்றா? என்கிற விஷயம் குறித்து கேரளா உயர்நீதிமன்றம் " ஜோசப் சர்தோ Vs G. கோபிநாதன் மற்றுமொருவர் (2008-4-KHC-463)" என்ற வழக்கில் பரிசீலித்துள்ளது.
இந்த விஷயம் குறித்து பல முரண்பட்ட தீர்ப்புகள் இருந்தபோதிலும் ஒரு காசோலை கொடுக்கப்பட்டு, அந்த காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில், அந்த காசோலையை வங்கியில் செலுத்துவதற்கு முன்பாக காசோலை கொடுத்தவரால் ஏதேனும் தொகை அளிக்கப்பட்டிருந்தால் அந்த காசோலையில் ஒரு மேற்குறிப்பினை (Endorsement) மாற்றுமுறை ஆவணச் சட்டம் பிரிவு 56 ன் படி காசோலை கொடுத்தவர் செய்திருந்தால் மட்டுமே, அந்த காசோலையை புகார்தாரர் பணம் பெறுவதற்காக வங்கியில் செலுத்தி அந்த காசோலை திருப்பப்பட்டதற்கு பின்னர், காசோலை கொடுத்தவர் தர வேண்டிய பாக்கித் தொகைக்காக வழக்கு தாக்கல் செய்ய முடியும்.
மாற்றுமுறை ஆவணச் சட்டம் பிரிவு 56 ன்படி காசோலையை வங்கியில் செலுத்துவதற்கு முன்பாக, ஏதேனும் பணம் தரப்பட்டிருந்தால், அந்த தொகையை காசோலையில் குறிப்பிட்டுள்ள தொகையில் கழித்துக் கொண்டு ஒரு மேற்குறிப்பினை காசோலை கொடுத்தவர் செய்ய வேண்டும். அவ்வாறு ஒரு மேற்குறிப்பினை காசோலை கொடுத்தவரிடமிருந்து பெறாமல், அந்த காசோலையை வங்கியில் செலுத்தி மாற்றுமுறை ஆவணச் சட்டம் பிரிவு 138 ன் கீழ் ஒரு வழக்கை தாக்கல் செய்ய முடியாது. ஆனால் இதர சட்டங்களின் கீழ் வழக்கு தொடரலாம்.
இந்த வழக்கில் சந்தோஷிடமிருந்து, நந்தகுமார் மேற்குறிப்பு எதையும் காசோலையில் வாங்கவில்லை. எனவே காசோலை மோசடி வழக்கை நந்தகுமார் தாக்கல் செய்ய முடியாது. எனவே குற்றவியல் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்கிறேன் என நீதிபதி உத்தரவிட்டார்.
CRL. MC. No - 1545/2015
Dt - 23.11.2015
சந்தோஷ் Vs நந்தகுமார் மேனன் மற்றும் பலர்
2016-1-MWN-CRL-DCC-64

No comments:

Post a Comment