Saturday, December 1, 2018

பணிக்கொடையை தீர்ப்புக்கு முன்பாக பற்றுகை

முருகையா என்பவர் பணத்தை வசூலிப்பதற்காக X என்பவர் மீது ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை தாக்கல் செய்யும்போதே முருகையா X ன் பணிக்கொடையை தீர்ப்புக்கு முன்பாக பற்றுகை செய்ய வேண்டும் என்று கோரி ஒரு இடைக்கால மனுவையும் தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்பு, பணிக்கொடையை தீர்ப்புக்கு முன்பாக பற்றுகை செய்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து X மேல்முறையீடு எதுவும் தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் X இறந்து போனதால், அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் வழக்கில் சேர்க்கப்பட்டு விசாரணை நடந்தது. விசாரணைக்கு பின் முருகையாவுக்கு சாதகமாக வழக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதனை எதிர்த்து பிரவாதிகள் மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்தனர். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதன்பிறகு முருகையா பணத்தை வசூலிக்க ஏதுவாக, X ன் பணிக்கொடைத் தொகையை பற்றுகை செய்து தனக்கு அளிக்குமாறு கூறி ஒரு நிறைவேற்றுதல் மனுவை தாக்கல் செய்தார். மேலும் ஏற்கனவே பணிக்கொடைத் தொகை நீதிமன்றத்தால் பற்றுகை செய்யப்பட்டுள்ளதால் அதனை தனக்கு வழங்க வேண்டும் என்றும் கோரினார்.
இந்நிலையில் பிரதிவாதிகள் பணிக்கொடையை நீதிமன்றம் பற்றுகை செய்ய அதிகாரமில்லை என்று கூறி, நீதிமன்றத்தால் ஏற்கனவே பற்றுகை செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ஒரு இடைக்கால மனுவை தாக்கல் செய்தனர். அதனை விசாரித்த நீதிமன்றம் முருகையாவின் நிறைவேற்றுதல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அதனை எதிர்த்து முருகையா மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார்.
வழக்கை நீதிபதி திரு. T. இரவீந்திரன் விசாரித்தார்.
உரிமையியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 60( G) ல் பணிக்கொடைத் தொகையை பற்றுகை செய்ய முடியாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த விலக்கானது தீர்ப்புக் கடனாளிக்கு மட்டுமே பொருந்தும். அவருடைய வாரிசுகளுக்கு பொருந்தாது. பணிக்கொடைத் தொகையை இறந்து போன தீர்ப்புக் கடனாளியின் வாரிசுகள் சட்டப்படி பெற உரிமையுடையவர்கள் ஆவார்கள். பணிக்கொடைத் தொகை தீர்ப்புக் கடனாளியின் ஒரு சொத்தாகும்.
ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடைத் தொகையை பற்றுகை செய்வதிலிருந்து உரிமையியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 60(g) ல் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த பணிக்கொடைத் தொகை ஓய்வூதியதாரரின் சட்டப்பூர்வ வாரிசுகளிடமிருந்தால் அதனை பற்றுகை செய்வதற்கு அந்த சட்டப் பிரிவில் விலக்கு அளிக்கப்படவில்லை.
பணிக்கொடைத் தொகையானது ஓய்வூதியதாரரின் சொத்து என்கிற வகையில் அவருடைய சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு வழங்கப்படுவதால், வாரிசுகள் உரிமையியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 60( g) ல் கூறப்பட்டுள்ள பலனை பெறுவதற்கு முடியாது.
எனவே முருகையாவின் மனுவை ஏற்றுக் கொள்கிறேன். பணிக்கொடைத் தொகையை முருகையாவிடம் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
CRP. NO - 470/2006 DT - 14.7.2017
முருகையா வெள்ளார் Vs வேலம்மாள் மற்றும் பலர்
2017-6-MLJ-416  2017-5-LW-197

No comments:

Post a Comment