Thursday, December 6, 2018

குற்றம் குறித்து மருத்துவமனையிலிருந்து தகவல்

Image may contain: text
குற்றம் குறித்து மருத்துவமனையிலிருந்து தகவல் வந்தால் 
காவல்துறை என்ன செய்ய வேண்டும்?
காயம்பட்டவர் குறித்து மருத்துவமனையில் இருந்து தகவல் பெற்றவுடன் காவல்துறை அலுவலர் அந்த தகவல் பெற்ற தேதி மற்றும் நேரம் குறிப்பிட்டு மருத்துவமனை தகவலில் கையொப்பம் செய்ய வேண்டும். அதில் தகவலை பெற்றுக் கொண்ட காவல் அலுவலரின் பெயர், பதவி, எண் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். 
➽ மேற்படி தகவல் பெற்ற விபரத்தை காவல் நிலைய பொது நாட்குறிப்பில் உடனே பதிவு செய்ய வேண்டும். 
➽ உடனடியாக காவல் நிலைய பொறுப்பில் உள்ள அலுவலர் மருத்துவமனைக்கு சென்று விபத்து பதிவேடு (Accident Register) நகல் பெற்று அதில் நோயாளி கூறியுள்ள விவரங்களை படித்து பார்த்து சம்பந்தப்பட்ட நோயாளியை விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்து அவரிடம் படித்துக் காட்டி கையெழுத்து பெற வேண்டும். அதன்கீழ் பதிவு செய்யப்பட்ட இடம், தேதி, நேரம் குறிப்பிட்டு பதிவு செய்த அதிகாரி கையொப்பம் செய்ய வேண்டும். 
➽ ஒருவேளை நோயாளி சுயநினைவு இல்லாமல் இருந்தால், அவரை சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்த்தவர் / உடனிருப்பவரை விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்போது பணி மருத்துவ அலுவலர் (Duty Medical Officer) அவர்களிடம் அந்த வாக்குமூலத்தில் நோயாளியின் அப்போதைய நிலையை குறித்து தெளிவாக எழுதிப் பெற வேண்டும். 
➽ மாறாக நோயாளி சுயநினைவின்றி இருக்கும்போது அவரை சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்த்தவர்கள் யாரும் இல்லாத நிலையிலும், புற நோயாளியாக சென்றிருந்தாலும் பொது நாட்குறிப்பில் பதிவு செய்து, சம்பவ இடம் சென்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
➽ காவல் நிலையம் வந்த பின்னர் வாக்குமூலத்தில் கூறியுள்ள புகார் கைது செய்வதற்குரிய குற்றமாக இருந்தால் மட்டுமே FIR பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு FIR பதிவு செய்யும் பட்சத்தில் சட்டப் பிரிவுகள், வழக்கு பதிவு செய்யும் தேதி, நேரம் ஆகியவை வழக்கு பதிவு செய்யும் அலுவலர் எழுதி கையொப்பம் செய்ய வேண்டும். 
➽ புகார் வாக்குமூலத்தை பதிவு செய்யும்போதும், எழுத்துமூலமான புகார் பெறப்படும்போதும் புகார்தாரர் சம்பவம் குறித்து ஆஜர்படுத்தும் சொத்துக்களை மகஜரில் / படிவம் 95 ல் கைப்பற்ற வேண்டும். இந்த தகவலை புகாரில் குறிப்பிட வேண்டும். 
➽ இறந்த பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் பிரேதம் தொடர்புடைய வழக்குகளில் கூடுமானவரை இறந்தவரின் உறவினர்களிடம் புகார் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும். 
➽ திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் இறந்துவிடும் பெண்கள் தொடர்பான வழக்குகளில் முடிந்தவரை இறந்துபோன பெண்ணின் பெற்றோர்களிடம் புகார் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும். 
➽ மருத்துவமனை தகவல், புகார் வாக்குமூலம் ஆகியவற்றை FIR - உடன் இணைத்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு உடனடியாக அனுப்ப வேண்டும். கைது செய்ய தேவைப்படாத குற்றமாக இருந்தால் கு. வி. மு. ச பிரிவு 155 ன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். 
➽ மருத்துவமனை தகவல் காவல் நிலையத்திற்கு கிடைக்கும் முன்பே அந்த சம்பவத்தை குறித்து காவல்துறை ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்தால், அதன்பின் பெற்ற அந்த சம்பவ தகவலின் தேதி, நேரம் குறிப்பிட்டு ஏற்கனவே வழக்கு பதிவு செய்த விவரங்களை எழுதி அந்த தகவலினை கட்ட நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். 
➽ மருத்துவமனையில் இருந்து பெறப்படும் தகவலுக்கும், புகார் வாக்குமூலத்திற்கும் முரண்பாடு இல்லாதவாறு காவல் அலுவலர் பார்த்துக் கொள்ள வேண்டும். 
➽ தகவலினை புகாருடன் சேர்த்து நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment