Tuesday, January 8, 2019

காலதாமதமாக வழக்கு தாக்கல் செய்தால்....?

Image may contain: text
காலதாமதமாக வழக்கு தாக்கல் செய்தால்....?
மூக்கையா என்பவர் 31.8.1987 ஆம் தேதி பணிநீக்கம் செய்யப்பட்டார். அந்த உத்தரவை எதிர்த்து மூக்கையா திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவருக்கு சாதகமாக 16.6.2000 ஆம் தேதி ஒருதலைப்பட்சமாக பணப்பலன்கள் அனைத்தையும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பு 1.8.2000 ஆம் தேதி அரசிதழில் பிரசுரிக்கப்பட்டது. மேற்படி தீர்ப்பு 1.9.2000 ஆம் தேதிக்கு பிறகு சட்டப்படி நடைமுறைக்கு வந்துவிடும். அதாவது 30 நாட்களுக்கு பிறகு நடைமுறைக்கு வரும். இதற்கிடையில் மூக்கையா இறந்து போனார்.
இந்நிலையில் மேற்படி ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பினை ரத்து செய்யக் கோரி மின்வாரியம் 117 நாட்கள் காலதாமதமாக ஒரு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவை தொழிலாளர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதனை எதிர்த்து மூக்கையாவின் வாரிசுகள் இந்த ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
வழக்கை நீதிபதி திரு. குலசேகரன் விசாரித்தார்.
தொழில் தகராறுகள் சட்டம் பிரிவு 17(ஏ) ன் அடிப்படையில் தீர்வளிப்பு (Award) அரசிதழில் பிரசுரிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்கள் கழித்து அமல்படுத்தப்பட வேண்டும். தொழிலாளர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒருதலைப்பட்ச தீர்ப்பு 30 நாட்களுக்கு பிறகு அமலுக்கு வந்து விடுவதால் தொழிலாளர் நீதிமன்றம் தனது அதிகார வரம்பை இழந்து விடும். இது குறித்து " சங்கம் டேப் கம்பெனி Vs அன்ஸ் ராஜ் (2005-MLJ-33),(2004-5-CTC-104)" என்ற வழக்கில், தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
தொழிலாளர் நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பினை ரத்து செய்ய அதிகாரம் கொண்டது. ஆனால் பிரிவு 17(ஏ) ன்படி 30 நாட்களுக்குள் ரத்து செய்யக் கோரும் விண்ணப்பத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஏனென்றால் இந்த காலவரம்புக்குள் தான் தொழில் சம்பந்தப்பட்ட தகராறுகளை குறித்து தீர்ப்பு வழங்குவதற்கு தொழிலாளர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.
எனவே தொழிலாளர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பினை ரத்து செய்யக் கோரி 30 நாட்களுக்குள் எதிர்மனுதார்கள் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் அந்த மனுவை தொழிலாளர் நீதிமன்றம் ஏற்க முடியாது என்று தீர்ப்பு வழங்கினார்.
W. P. NO - 14752/2003
dt- 11.8.2006
சுப்புலட்சுமி மற்றும் பலர் Vs நீதிமன்ற அலுவலர், தொழிலாளர் நீதிமன்றம், திருநெல்வேலி மற்றும் ஒருவர்
2006-4-MLJ-602

No comments:

Post a Comment