Thursday, January 10, 2019

தடை கோரி வழக்கு

Image may contain: text
தடை கோரி வழக்கு
பக்தவச்சலம் என்பவரும் மற்றொருவரும் ஒரு சொத்தை தனியார் நிதி நிறுவனம் ஒன்றிடம் அடமானம் வைத்து கடன் பெற்றிருந்தனர். கடன் கொடுத்த நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யாமலே அடமானச் சொத்தை விற்பனை செய்வதற்கான அதிகாரம் சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 69 ன்படி உண்டு என்று அடமானப் பத்திரத்தில் எழுதப்பட்டிருந்தது. கடன்தாரர்கள் தொகையை திருப்பி செலுத்தாததால் நிதி நிறுவனம் சொத்தை ஏலம் விட வேறொரு நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்தது.
அதன்படி சொத்து 11.7.2009 ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்பட்டது. அந்ந ஏலத்தில் ராஜேஷ் குமார் என்பவர் பங்கு கொண்டு ரூ 10,10,000/- க்கு சொத்தை ஏலம் எடுத்தார். ராஜேஷ் குமார் பெயருக்கு விற்பனை ஆவணமும் எழுதி பதிவு செய்யப்பட்டது.
அதன்பிறகு ஏலம் எடுத்த சொத்திற்கு தன்னை உரிமையாளராக அறிவிக்க கோரியும், சொத்தின் சுவாதீனத்தை பக்தவச்சலம் மற்றும் ஒருவரிடமிருந்து பெற்றுத் தரக் கோரியும் ஒரு வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். பின்னர் அந்த வழக்கில் ஒரு இடைக்கால மனுவை தாக்கல் செய்து, அதில் பக்தவச்சலம் மற்றும் ஒருவர் சட்டத்திற்கு புறம்பாக சொத்தை அனுபவித்து வருவதால் இறுதி தீர்ப்பு வரும் வரை ரூ. 25,000/- ஐ இருவரும் வழக்கு முடியும் வரை தர வேண்டும் என்று கோரினார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி, மாதம்தோறும் ரூ. 8,000/- ஐ இடைக்காலமாக மனுத்தாக்கல் செய்த நாளிலிருந்து ராஜேஷ் குமாருக்கு, பக்தவச்சலமும், மற்றொருவரும் வழங்க வேண்டும் என்றும், அந்த தொகையை 4 மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும், அதன்பிறகு தொடர்ந்து ரூ. 8,000/-ஐ வழக்கு நிலுவையில் இருக்கும் வரை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
ஆனால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் பக்தவச்சலமும், மற்றொருவரும் பணத்தை செலுத்தவில்லை. அதனால் அசல் வழக்கில் பக்தவச்சலமும், மற்றொருவரும் எதிர் கட்சி செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கோரி ராஜேஷ் குமார் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
வழக்கை நீதிபதி திரு. R. சுப்பிரமணியன் விசாரித்தார். 
ஒரு வழக்கில் பிரதிவாதி அவரது வழக்கை நடத்துவதற்கு ஒரு தடையை விதிப்பதற்கான அதிகாரம் நீதிமன்றத்திற்கு தனிப்பட்ட ஒரு சட்டப் பிரிவின் மூலமாக வழங்கப்படவில்லை என்றாலும் உரிமையியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 151 ன் கீழ் வழங்கப்பட்டுள்ள உள்ளார்ந்த அதிகாரத்தை பயன்படுத்தி, அது போன்ற ஒரு உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கலாம். எந்த சூழ்நிலையில் பிரதிவாதி தரப்பில் வழக்கை நடத்துவதற்கு ஒரு தடையை விதிக்கலாம் என்பது குறித்து உயர்நீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்புகள் கூறியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் " தசாரி வெங்டாச்சாரியலு Vs மஞ்சலா யசோபு மற்றுமொருவர் (1931-2-MLJ-477)" என்ற வழக்கில், உரிமையியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 151 ல் வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு வழக்கின் பிரதிவாதி அவரது எதிர்ப்பு வாதத்தை முன் வைப்பதற்கு தடை விதிக்கலாம் என்று கூறியுள்ளது.
அதேபோல்" R. D. இராமையா சேர்வை Vs சாமா அய்யர் மற்றும் பலர் (1946-2-MLJ-210)" என்ற வழக்கிலும் இதே கருத்தை உயர்நீதிமன்றம் தீர்ப்பாக கூறியுள்ளது.
ஆனால் இவ்வாறு ஒரு தடையை விதிப்பதற்கு, பிரதிவாதி கட்டாயமாக உத்தரவை நிறைவேற்ற வேண்டும் தவறினால் எதிர்ப்பு வாதத்தை முன் வைப்பதற்கு தடை விதிக்க நேரிடும் என்று விசாரணை நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.

A. S. NO - 1543/2018     C. S. NO - 829/2010   தேதி - 09.03.2018
S. ராஜேஷ் குமார் Vs C. பக்தவச்சலம் மற்றும் பலர்  2018-1-MLJ-411

No comments:

Post a Comment