Sunday, December 30, 2018

முஸ்லிம் சட்டத்தில் உயில்

Image may contain: text
முஸ்லிம் சட்டத்தில்  உயில்
 'வசிய்யத்
முஸ்லிம் சட்டத்தில் 'வசிய்யத்' என்பது உயில் அல்லது மரண சாசனம் என்று அழைக்கப்படுகிறது. கொடையாக ஒரு பொருளை கொடுக்கும் பொழுது, கொடைப் பொருள் உடனடியாக கைமாற வேண்டும். ஆனால் வசிய்யதில் கொடுப்பவர் இறந்த பின்னரே 'உயில் சொத்து' பெறுபவர் கைக்கு வந்து சேரும். சொத்து கைமாறும் பொழுது கொடுப்பவர் உயிருடன் இருப்பதில்லை. ஆனால் கொடையில் கொடுப்பவரும், பெறுபவரும் உயிருடன் இருக்க வேண்டும். 
உயில் வழிச் சொத்து
உயில் வழிச் சொத்து கொடுக்கும் பொழுது, கொடுப்பவர் இறந்திருக்க வேண்டும். அவர் இறந்த பின்னரே' உயில்' நடைமுறைக்கு வருகிறது. அப்பொழுதுதான் அச்சொத்து பெறுபவருக்கு வந்து சேரும். உயில் வழிச் சொத்து பெறுபவரை உயில்வழிக் கொடை பெறுபவர் (Legatee) என்றும், எழுதி வைப்பவரை உயில் எழுதி வைப்பவர் (Testator) என்றும் அழைக்கப்படுகிறார்கள். உயிலை எழுதி வைப்பவர் இறக்கும்வரை பெறுபவருக்கு சொத்துக்களில் எந்த உரிமையும் ஏற்படாது. உயிலை எழுதி வைப்பவருக்கு அதனை ரத்து செய்யவும் அதிகாரம் உண்டு. உயில் எழுதி வைப்பவரின் இறப்பிற்கு பின்னரே நடைமுறைக்கு வரும்.இரண்டு கட்டுப்பாடு
ஒரு முஸ்லீம் உயில் எழுதுவது இரண்டு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.
1. தன்னுடைய முழு சொத்தில் 1/3 பங்குக்கு மிகாமல் தான் உயில் எழுதி வைக்க வேண்டும். மீதி 2/3 பாகமும் வாரிசுரிமை சட்டப்படி பாகம் பிரிக்கப்பட வேண்டும். கடன், இறுதிச் சடங்கு செலவு போக மீதமிருப்பதே அவர் விட்டுச் செல்லும் சொத்தாகும்.
2. தன்னுடைய முறையான உடனடி சொத்துரிமை பெறும் வாரிசுகளுக்கு உயில் மூலமாக சொத்து ஏதும் கொடுக்கக்கூடாது.
எடுத்துக்காட்டாக மனைவிக்கோ, மகனுக்கோ கொடுக்கக்கூடாது. ஆனால் மகனின் மகனுக்கு கொடுக்கலாம். மகன் நேரடி வாரிசு என்பதால் அவருக்கு உயில் எழுத முடியாது. ஆனால் பேரனுக்கு உயில் எழுதலாம்.
உயில் எழுத்து மூலமாகவோ, வாய்மொழியாகவோ கொடுக்கலாம். எந்தவித சம்பிரதாயச் சடங்குமின்றி ஒரு முஸ்லீம் உயில் எழுதி வைக்க முடியும். இந்தியாவில் உயிலின் சட்டம் பற்றி இந்திய வாரிசுரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. முஸ்லிம்கள், முஸ்லீம் சட்டப்படி உயில் எழுதி வைக்கலாம். ஆயினும் இந்திய வாரிசுரிமை சட்டத்தில் உள்ள பிரிவுகள் 316 - 331 முஸ்லிம்களுக்கும் பொருந்தும். இந்த சட்டப் பிரிவுகள் முஸ்லிம்களை கட்டுப்படுத்தும். ஒரு முஸ்லீம் எழுதி வைக்கும் உயில், சென்னை போன்ற மாநகரங்களில் வைத்து எழுதப்பட்டால் கட்டாயம் Probate செய்யப்பட வேண்டும்.
எழுத்து மூலமாக உயில் எழுதி வைக்கும் பொழுது, முத்திரைத்தாளில் எழுதி வைக்க வேண்டியதில்லை. விரும்பினால் பதிவு செய்து கொள்ளலாம். எழுதி வைத்தாலும், பதிவு செய்தாலும் நேரில் பார்த்த சாட்சிகள் மூலமாகத்தான் உயிலை நிரூபிக்க வேண்டும். ஆவணத்தில் எழுதி இருந்தாலும் கையெழுத்திட வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில சமயங்களில் தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தும் கடிதங்களும், குறிப்புகளும் கூட உயிலாக கருதப்பட்டிருக்கிறது. உயில் எழுதப்பட்ட பின்னர், அதனை திருத்தி எழுத வேண்டும் என்று அவருடைய வழக்கறிஞருக்கு கடிதம் எழுதி இருந்தால் அதை அந்த உயிலின் இணைப்பாக கருத வேண்டும். இதை கோடிசில் (Codicil) என்கிறார்கள். இது உயிலின் ஒரு பகுதியாக கருதப்படும். உயிலில் பெறுபவர் யார் என்பதை தெளிவாக சொல்லி இருக்க வேண்டும்.

Tuesday, December 18, 2018

காசோலை வழக்கு

சந்தோஷ் என்பவர் கடனை திருப்பி செலுத்தும் விதமாக நந்தகுமார் என்பவருக்கு ரூ. 28 லட்சத்திற்கு காசோலை ஒன்றை 1.11.2013 ஆம் தேதியிட்டு கொடுத்தார். அந்த காசோலை தேதிக்கு முன்பாக ரூ. 6 லட்சத்தை சந்தோஷ், நந்தகுமாருக்கு வழங்கினார். பாக்கி ரூ. 22 லட்சத்தை சந்தோஷ் தரவில்லை. அதனால் நந்தகுமார் சந்தோஷ் கொடுத்த காசோலையை வங்கியில் செலுத்தினார். பணமில்லாமல் அந்த காசோலை திருப்பப்பட்டது. பின்னர் நந்தகுமார் பாக்கி தொகை ரூ. 22 லட்சத்தை திருப்பி தர வேண்டும் என்று கேட்டு ஒரு அறிவிப்பை சந்தோஷ்க்கு அனுப்பினார். அந்த அறிவிப்புக்கு தான் பணம் ஏதும் தர வேண்டியதில்லை என்று கூறி சந்தோஷ் பதில் அறிவிப்பு கொடுத்தார். அதனால் நந்தகுமார் ஒரு காசோலை மோசடி வழக்கை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கேரளா உயர்நீதிமன்றத்தில் சந்தோஷ் மனுத்தாக்கல் செய்தார். அதற்கு காரணமாக 6 லட்சத்தை நந்தகுமார் பெற்றுக் கொண்டிருக்கிறார். தான் வேறு பணம் ஏதும் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் நந்தகுமார் ரூ. 20 லட்சத்திற்குமான காசோலையை வசூலுக்கு தாக்கல் செய்துள்ளார். எனவே அந்த காசோலையின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்துள்ளது சட்டத்திற்கு விரோதமானது என்று கூறியிருந்தார்.
நந்தகுமார் தரப்பில், பாக்கி பணத்திற்காக தான் வழக்கு தாக்கல் செய்துள்ளோம் எனவே காசோலை மோசடி வழக்கு சட்டப்படி சரியானது தான் என்று கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி.....முன் தேதியிட்டு ஒரு காசோலை கொடுக்கப்பட்டு, அந்த காசோலை கொடுக்கப்பட்ட தேதிக்கு முன்பாக அந்த காசோலை வங்கியில் பணம் பெறுவதற்காக செலுத்தப்படும் நாளிற்கு முன்பாக, அந்த காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையில், ஒரு பகுதியை காசோலை கொடுத்தவர் அளித்துள்ள நிலையில் மீதமுள்ள தொகைக்காக அந்த காசோலையின் அடிப்படையில் மா. ஆ. ச. பிரிவு 138 ன் கீழ் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் அந்த வழக்கு ஏற்புடைய ஒன்றா? என்கிற விஷயம் குறித்து கேரளா உயர்நீதிமன்றம் " ஜோசப் சர்தோ Vs G. கோபிநாதன் மற்றுமொருவர் (2008-4-KHC-463)" என்ற வழக்கில் பரிசீலித்துள்ளது.
இந்த விஷயம் குறித்து பல முரண்பட்ட தீர்ப்புகள் இருந்தபோதிலும் ஒரு காசோலை கொடுக்கப்பட்டு, அந்த காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில், அந்த காசோலையை வங்கியில் செலுத்துவதற்கு முன்பாக காசோலை கொடுத்தவரால் ஏதேனும் தொகை அளிக்கப்பட்டிருந்தால் அந்த காசோலையில் ஒரு மேற்குறிப்பினை (Endorsement) மாற்றுமுறை ஆவணச் சட்டம் பிரிவு 56 ன் படி காசோலை கொடுத்தவர் செய்திருந்தால் மட்டுமே, அந்த காசோலையை புகார்தாரர் பணம் பெறுவதற்காக வங்கியில் செலுத்தி அந்த காசோலை திருப்பப்பட்டதற்கு பின்னர், காசோலை கொடுத்தவர் தர வேண்டிய பாக்கித் தொகைக்காக வழக்கு தாக்கல் செய்ய முடியும்.
மாற்றுமுறை ஆவணச் சட்டம் பிரிவு 56 ன்படி காசோலையை வங்கியில் செலுத்துவதற்கு முன்பாக, ஏதேனும் பணம் தரப்பட்டிருந்தால், அந்த தொகையை காசோலையில் குறிப்பிட்டுள்ள தொகையில் கழித்துக் கொண்டு ஒரு மேற்குறிப்பினை காசோலை கொடுத்தவர் செய்ய வேண்டும். அவ்வாறு ஒரு மேற்குறிப்பினை காசோலை கொடுத்தவரிடமிருந்து பெறாமல், அந்த காசோலையை வங்கியில் செலுத்தி மாற்றுமுறை ஆவணச் சட்டம் பிரிவு 138 ன் கீழ் ஒரு வழக்கை தாக்கல் செய்ய முடியாது. ஆனால் இதர சட்டங்களின் கீழ் வழக்கு தொடரலாம்.
இந்த வழக்கில் சந்தோஷிடமிருந்து, நந்தகுமார் மேற்குறிப்பு எதையும் காசோலையில் வாங்கவில்லை. எனவே காசோலை மோசடி வழக்கை நந்தகுமார் தாக்கல் செய்ய முடியாது. எனவே குற்றவியல் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்கிறேன் என நீதிபதி உத்தரவிட்டார்.
CRL. MC. No - 1545/2015
Dt - 23.11.2015
சந்தோஷ் Vs நந்தகுமார் மேனன் மற்றும் பலர்
2016-1-MWN-CRL-DCC-64

Monday, December 17, 2018

ஒருவரை அடித்து கொன்று தூக்கில் ஏற்றினால்?

Image may contain: text
தூக்கிட்டு இறந்தவர் கழுத்தில் வியற்வை காணப்படாது
கழுத்து நீண்டு காணப்படாது
தொடைகள் விறை பிடித்தாற் போல காணப்படும்
ஆண்குறி வறண்டு சுருங்கி காணப்படும்
கால் பாதங்கள் நிமிராமல் இருக்கும்
கண்விழி கீழ்நோக்கி இருக்காது
கை மடங்கி அசையும்
கண்விழி சரிந்து காணப்படாது
கால்கள் சரியாக தன்னிலை பெற்றிருக்கும்
வயிறு மேல்நோக்கி விரிவடையாது
விந்து ஆண்குறியிலிருந்து வெளியாகாது
உட்கொண்ட உணவு வாந்தி மயமாக எழும்பி சங்கை அடைத்து விடும்

Sunday, December 16, 2018

தூக்கு போட்டுத்தான் தற்கொலை செய்துள்ளாரா?

Image may contain: text
தூக்கு போட்டுத்தான் தற்கொலை செய்துள்ளார்! கண்டு பிடிப்பது எப்படி?
தூக்கிலிட்டு செத்த பிணம் இது என முடிவு செய்ய கீழேயுள்ள 40 அடையாளங்களை கவனிக்க வேண்டும்.
நாக்கு வறண்டிருக்கும். அதற்கிடையே எச்சில் நிற்கும்.
ஆண்குறி உள்ளே போய் இழுப்பட்டிருக்கும்
கண்கள் பிதுங்கி நிற்கும்
கால்கள் நிமிர்ந்து கட்டைப் போல் இருக்கும்
தொடைகளில் சிவந்த நீர் காணப்படும்
கழுத்து நீண்டிருக்கும்
பார்வை கீழ்நோக்கி இருக்கும்
ஆன்மா ஆண்குறி வழியாக பிரிந்திருக்கும்
சோரைக் காணப்படும்
காலும், கையும் சட்டுவம் போலாகித் தோன்றும்
கோழை போல ஆண்குறியிலிருந்து விந்து வெளியே வந்திருக்கும்
உடம்பு குனிந்திருக்கும்
வீரியம் அடங்கியிருக்கும்
முகம் மாறுபட்டு இருக்கும்
மலம் வெளியே வந்து விழும்
கை, கால்கள் திமிறி நிமிர்ந்து காணப்படும்
கழுத்து இழுத்தாற் போல நீண்டு விடும்
நீண்ட கழுத்தின் மேல்பக்கம் உயர்ந்த மலை போல தோன்றும்
உடல் பிசுபிசுத்துப் இருக்கும்
முத்து முத்தாக வியற்வை அரும்பி இருக்கும்
மலம் இளகி இருக்கும்
கோழை வெளிப்புறம் வடியும்
வாய் கருத்திருக்கும்
முகம் நிறம் மாறி பற்கள் நீல நிறமாக தெரியும்
கண்கள் பஞ்சமடைந்திருக்கும்
வெளியான கோழை ஒரு துர்நாற்றம் அடிக்கும்
தோள்களின் இணைப்புகள் இறங்கி இருக்கும்
தோள்களை உயர்த்தினால் மடித்தது போல பூட்டு விடும்
வயிறு தாழ்ந்திருக்கும்
உடல் சிறுத்திருக்கும்
கீழ் நோக்கிய பார்வை இருக்கும்
கழுத்தில் கயிற்றின் அடையாளம் முறுக்கி கொண்டு இருக்கும்
கால்களில் ஒன்று நீண்டு போயிருக்கும்
மேல் வயிற்றில் குடல் வலியதாக காணப்படும்
கண்கள் சிவந்திருக்கும்
நகங்கள் துடைகளில் உராய்ந்த உராய்ப்பு காணப்படும்
சங்கு பூட்டு விட்டிருக்கும்
கன்றியது போல முகம் மாறுபட்டிருக்கும்
கண்கள் பஞ்சமடைந்திருக்கும்
கயிறு பிரிகள் சுற்றி முறுக்கிக் கொண்டு இருக்கும்

Friday, December 14, 2018

பிறப்பு சான்றிதழ்களில் ஏற்படும் தவறுகளை திருத்த

Image may contain: text
Image may contain: text
பிறப்பு சான்றிதழ்களில் ஏற்படும் தவறுகளை திருத்துவதற்கு அதிகாரம்
பிறப்பு சான்றிதழ்களில் ஏற்படும் தவறுகளை திருத்துவதற்கு அதிகாரம் பெற்ற நபர் யார் என்பதை அறிந்து கொள்வதற்கு முன்பாக 1969 ஆம் ஆண்டின் பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவுச் சட்டம் மற்றும் 2000 ஆம் ஆண்டின் பிறப்பு மற்றும் இறப்பு விதிகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
பிறப்பு மற்றும் இறப்பு பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளவற்றில் திருத்தம் அல்லது ரத்து செய்வது பற்றி பிரிவு 15 கூறுகிறது.
பிரிவு 15 - 
இந்த சட்டத்தின் படி பதிவாளர் பராமரித்து வரும் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்பு அல்லது இறப்பு குறித்த விபரத்தில் தவறு அல்லது மோசடியாக அல்லது முறையற்ற வகையில் அந்தப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மனநிறைவு அடைந்தால் மாநில அரசு வகுத்துள்ள நேர்விற்கேற்ப அந்தப் பதிவுகளில் திருத்தம் செய்யவோ, அந்த பதிவை ரத்து செய்யும் விதமாகவோ அசல் பதிவில் எந்த திருத்தத்தையும் மேற்கொள்ளாமல் விளிம்புக் கோட்டில் (Margin Area) உரிய பதிவுகளை செய்து அந்த திருத்தம் அல்லது ரத்து செய்யப்பட்டுள்ள தேதியை குறிப்பிட்டு சான்று கையொப்பம் இட வேண்டும்.
பிரிவு 15(1) 
பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள விபரத்தில் எழுத்துப்பிழை அல்லது சாதாரண பிழைகள் ஏற்பட்டுள்ளது என பதிவாளர் கவனத்திற்கு கொண்டு வரப்படும் போது அல்லது வேறு ஏதாவது ஒரு வகையில் அந்த தவறு குறித்து பதிவாளருக்கு தெரிய வருகிற நிலையில் தன்னால் பராமரிக்கப்பட்டு வருகிற அந்தப் பதிவேட்டில் ஏற்பட்டுள்ள தவறுகள் குறித்து பதிவாளர் ஒரு விசாரணையை மேற்கொண்டு, அந்த தவறு நடைபெற்றுள்ளது என மனநிறைவு அடைந்தால், அந்த பதிவை பிரிவு 15 ல் கூறப்பட்டுள்ளவாறு திருத்தவோ அல்லது நீக்கவோ செய்வதோடு தகுந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அந்த திருத்தம் குறித்த பதிவேட்டின் நகலை அட்டவணையில் கட்டம் 2 ல் குறிப்பிடப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்து தலைவர், நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் போன்றவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
எனவே பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழில் திருத்தம் செய்ய வட்டாட்சியர், சார் ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், உதவி ஆணையர் ஆகியோர்களுக்கு அதிகாரம் உள்ளது.
1969 ஆம் ஆண்டின் பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவுச் சட்டத்தின் பிரிவு 15 மற்றும் 2000 ஆம் ஆண்டின் பிறப்பு மற்றும் இறப்பு விதிகளின், விதி 11 ன்படி, பதிவாளர் பிறப்பு சான்றிதழ்களில் ஏற்படும் தவறுகளை திருத்துவதற்கு அதிகாரம் பெற்றவர் ஆவார்.
இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை "W. P No - 8319/2018 ல் 11.6.2018 ல் விளக்கமாக தீர்ப்பு கூறியுள்ளது.

Friday, December 7, 2018

நிலங்களின் வகைகள் பற்றி

Image may contain: text
நிலங்களின் வகைகள் பற்றி
நஞ்சை நிலம் 
பாசன ஆதாரத்திலிருந்து சாகுபடிக்கு நீர்பெறும் உரிமைப் பெற்று நெல் போன்ற தானியங்களை விளைவிக்கக்கூடிய நிலங்களுக்கு தான் நஞ்சை நிலம் என்று பெயர். தமிழ்நாட்டில் மட்டும் 16 லட்சத்து 57 ஆயிரத்து 676 ஹெக்டேர் உள்ளது. ( 1 ஹெக்டேர் என்பது 2 ஏக்கர் 47 செண்ட்)
புஞ்சை நிலம்
பாசன வசதி இல்லாத சோளம், கம்பு, ராகி போன்ற தானியங்களை விளைவிக்கக்கூடிய மேடான நிலங்களுக்கு புஞ்சை நிலம் என்று பெயர். இந்த நிலங்கள் மழை மற்றும் கிணற்றுப் பாசன வசதிகளை நம்பிக் கூட இருக்கலாம். தமிழ்நாட்டில் மட்டும் 67 லட்சத்து 80 ஆயிரத்து 80 ஹெக்டேர் உள்ளது. ( 1 ஹெக்டேர் என்பது 10,000 சதுர மீட்டர்)
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஆற்று தண்ணீரை நம்பி இருப்பது நஞ்சை. மழையை மட்டுமே நம்பி இருப்பது புஞ்சை.
மானாவரி
மழைநீரை மட்டுமே நம்பி நெல் போன்ற தானியங்களை விளைவிக்கக்கூடிய நிலங்களுக்கு மானாவரி என்று பெயர்.
இன்னொன்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலங்களில் சாகுபடி செய்ய தகுதி வாய்ந்த நிலங்களை "தீர்வை ஏற்பட்ட தரிசு" என்றும், சாகுபடியே செய்ய முடியாத கல்லாங்குத்து, பாறைகள் போன்று இருக்கும் பகுதிகளை "தீர்வை ஏற்படாத தரிசு" என்றும் சொல்கிறார்கள்.
அதேபோல புறம்போக்கு என்றால் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலங்கள் தான். ஆனால் பொது உபயோகத்திற்கு பயன்படுத்தி கொள்வதற்காகவும், எதிர்காலத்தில் பொது விஷயங்களுக்காக தந்து விடலாம் என்ற நிலையில் இருக்கும் நிலங்களைத் தான் "புறம்போக்கு" என்கிறார்கள்.

Thursday, December 6, 2018

குற்றம் குறித்து மருத்துவமனையிலிருந்து தகவல்

Image may contain: text
குற்றம் குறித்து மருத்துவமனையிலிருந்து தகவல் வந்தால் 
காவல்துறை என்ன செய்ய வேண்டும்?
காயம்பட்டவர் குறித்து மருத்துவமனையில் இருந்து தகவல் பெற்றவுடன் காவல்துறை அலுவலர் அந்த தகவல் பெற்ற தேதி மற்றும் நேரம் குறிப்பிட்டு மருத்துவமனை தகவலில் கையொப்பம் செய்ய வேண்டும். அதில் தகவலை பெற்றுக் கொண்ட காவல் அலுவலரின் பெயர், பதவி, எண் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். 
➽ மேற்படி தகவல் பெற்ற விபரத்தை காவல் நிலைய பொது நாட்குறிப்பில் உடனே பதிவு செய்ய வேண்டும். 
➽ உடனடியாக காவல் நிலைய பொறுப்பில் உள்ள அலுவலர் மருத்துவமனைக்கு சென்று விபத்து பதிவேடு (Accident Register) நகல் பெற்று அதில் நோயாளி கூறியுள்ள விவரங்களை படித்து பார்த்து சம்பந்தப்பட்ட நோயாளியை விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்து அவரிடம் படித்துக் காட்டி கையெழுத்து பெற வேண்டும். அதன்கீழ் பதிவு செய்யப்பட்ட இடம், தேதி, நேரம் குறிப்பிட்டு பதிவு செய்த அதிகாரி கையொப்பம் செய்ய வேண்டும். 
➽ ஒருவேளை நோயாளி சுயநினைவு இல்லாமல் இருந்தால், அவரை சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்த்தவர் / உடனிருப்பவரை விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்போது பணி மருத்துவ அலுவலர் (Duty Medical Officer) அவர்களிடம் அந்த வாக்குமூலத்தில் நோயாளியின் அப்போதைய நிலையை குறித்து தெளிவாக எழுதிப் பெற வேண்டும். 
➽ மாறாக நோயாளி சுயநினைவின்றி இருக்கும்போது அவரை சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்த்தவர்கள் யாரும் இல்லாத நிலையிலும், புற நோயாளியாக சென்றிருந்தாலும் பொது நாட்குறிப்பில் பதிவு செய்து, சம்பவ இடம் சென்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
➽ காவல் நிலையம் வந்த பின்னர் வாக்குமூலத்தில் கூறியுள்ள புகார் கைது செய்வதற்குரிய குற்றமாக இருந்தால் மட்டுமே FIR பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு FIR பதிவு செய்யும் பட்சத்தில் சட்டப் பிரிவுகள், வழக்கு பதிவு செய்யும் தேதி, நேரம் ஆகியவை வழக்கு பதிவு செய்யும் அலுவலர் எழுதி கையொப்பம் செய்ய வேண்டும். 
➽ புகார் வாக்குமூலத்தை பதிவு செய்யும்போதும், எழுத்துமூலமான புகார் பெறப்படும்போதும் புகார்தாரர் சம்பவம் குறித்து ஆஜர்படுத்தும் சொத்துக்களை மகஜரில் / படிவம் 95 ல் கைப்பற்ற வேண்டும். இந்த தகவலை புகாரில் குறிப்பிட வேண்டும். 
➽ இறந்த பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் பிரேதம் தொடர்புடைய வழக்குகளில் கூடுமானவரை இறந்தவரின் உறவினர்களிடம் புகார் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும். 
➽ திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் இறந்துவிடும் பெண்கள் தொடர்பான வழக்குகளில் முடிந்தவரை இறந்துபோன பெண்ணின் பெற்றோர்களிடம் புகார் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும். 
➽ மருத்துவமனை தகவல், புகார் வாக்குமூலம் ஆகியவற்றை FIR - உடன் இணைத்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு உடனடியாக அனுப்ப வேண்டும். கைது செய்ய தேவைப்படாத குற்றமாக இருந்தால் கு. வி. மு. ச பிரிவு 155 ன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். 
➽ மருத்துவமனை தகவல் காவல் நிலையத்திற்கு கிடைக்கும் முன்பே அந்த சம்பவத்தை குறித்து காவல்துறை ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்தால், அதன்பின் பெற்ற அந்த சம்பவ தகவலின் தேதி, நேரம் குறிப்பிட்டு ஏற்கனவே வழக்கு பதிவு செய்த விவரங்களை எழுதி அந்த தகவலினை கட்ட நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். 
➽ மருத்துவமனையில் இருந்து பெறப்படும் தகவலுக்கும், புகார் வாக்குமூலத்திற்கும் முரண்பாடு இல்லாதவாறு காவல் அலுவலர் பார்த்துக் கொள்ள வேண்டும். 
➽ தகவலினை புகாருடன் சேர்த்து நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.

சொத்தை அனுபவிக்க போலீஸ் பாதுகாப்பு

Image may contain: text
சொத்தை அனுபவிக்க போலீஸ் பாதுகாப்பு
சேலம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ரவிகிருஷ்ணன் என்பவர் தன்னை சொத்தின் உரிமையாளர் என்று அறிவிக்க கோரியும், யாரும் இடையூறு செய்யக் கூடாதென நிரந்தர உறுத்துக் கட்டளை பரிகாரம் கோரியும் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரவிகிருஷ்ணனுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. அதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட முதல் மேல்முறையீட்டு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இரண்டாவது மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றமும் ரவிகிருஷ்ணின் சொத்துரிமையை ஏற்று, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை 7.8.2017 ஆம் தேதி உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.
ஆனால் அதன்பிறகும் சொத்தை அனுபவிக்க பிரதிவாதி இடைஞ்சல்கள் செய்ததால் ரவிகிருஷ்ண் பாதுகாப்பு கேட்டு சேலம் காவல்துறையில் 30.8.2017 ஆம் தேதி ஒரு மனுவை அளித்தார். ஆனால் அந்த மனுவின் மீது காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரவிகிருஷ்ணன் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
வழக்கை நீதிபதி திரு. M. S. இரமேஷ் விசாரித்தார்.அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், உயர்நீதிமன்றம் இரண்டாவது மேல்முறையீட்டில் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து பிரதிவாதி மறுஆய்வு மனுவை தாக்கல் செய்திருப்பதாக கூறினார்.
ரவிகிருஷ்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிரதிவாதி தாக்கல் செய்துள்ள மறுஆய்வு மனு நீதிமன்ற கோப்பிற்கு ஏற்று கொள்ளப்படவில்லை. மேலு‌ம் அந்த மறுஆய்வு மனுவில் எவ்வித இடைக்கால உத்தரவுகளும் பிறப்பிக்கப்படவில்லை என்று கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி....ஓர் உரிமையியல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் ஒருவர் சொத்தை அனுபவிக்க ஏதாவது இடையூறுகளோ அல்லது மிரட்டல்களோ ஏற்பட்டால், காவல்துறையினர் உரிமையியல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை நடைமுறைப்படுத்த, தீர்ப்பை பெற்றவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். இது காவல்துறையின் சட்டப்பூர்வமான கடமையாகும். தீர்ப்பு அடிப்படையில் பாதுகாப்பு கேட்டு கொடுக்கப்படும் மனுக்களை காவல்துறையினர் கிடப்பில் போடக்கூடாது. உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று கூறி, ரவிகிருஷ்ணன் சொத்தை நிம்மதியாக அனுபவிக்க போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.
CRL. OP. NO - 25255/2017,  DT - 14.2.2018
T. ரவிகிருஷ்ணன் Vs காவல் ஆணையர், சேலம் மற்றும் பலர்
2018-1-MWN-CRL-447

வாடிக்கையாளர் காலமானதற்கு பிறகு - வங்கி நடைமுறை

Image may contain: text
வாடிக்கையாளர் காலமானதற்கு பிறகு - வங்கி நடைமுறை
பொதுக் கூறுகள் சட்டம் (General Clauses Act) பிரிவு 3(42) ல் நபர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது வங்கிகளுக்கும் பொருந்தும். அந்த பொதுக் கூறுகள் சட்டத்தில் "நபர்" என்று குறிப்பிட்டுள்ளதும், வங்கி வரைமுறைச் சட்டத்தில் பிரிவு 45ZA(1) ல் "நபர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளதும் ஒரே பொருளைத் தான் தருகிறது.
ஒரு வாடிக்கையாளர் காலமானதற்கு பின்னர் அவரால் செய்யப்பட்டுள்ள நியமனத்தை செல்லாது என்று கூற வங்கிகளுக்கு உரிமை இல்லை. இது குறித்து ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றம் " சந்திரம்மா Vs ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் (AIR-1988-AP-289)" என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது.
அதேபோல் உச்சநீதிமன்றமும் " பனாராசிதாஸ் Vs வெல்த் டேக்ஸ் ஆபிசர் மீரட் (AIR-1965-SC-1387)" என்ற வழக்கிலும் தீர்ப்பு கூறியுள்ளது.
ஒரு வங்கியின் வாடிக்கையாளர் ஒரு தொகையை வைப்பீடு செய்யும் போது Form DA-I இல் ரீன் காலமானதற்கு பின்னர், அவரால் வைப்பீடு செய்யப்பட்ட தொகையை வங்கி யாருக்கு அளிக்க வேண்டும் என்பதற்காக ஒரு நபரின் பெயரை குறிப்பிட வேண்டும். வங்கி வரைமுறைச் சட்டம் பிரிவு 45ZA(I) ல் குறிப்பிடப்பட்டுள்ள "நபர்" என்ற விளக்கத்திற்குள், அந்த வாடிக்கையாளர் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள Nominated Person ம் வருவார்.
ஆனால் வங்கி நிறுவன விதிகளில், விதி 2 மற்றும், இந்திய ரிசர்வ் வங்கியால் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை ஆகியவற்றில் நபர் என்றால் தனிப்பட்ட ஒரு நபர் ஆவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி நிறுவன விதிகளின், விதி 2(I) ல் கூறப்பட்டுள்ள தனிப்பட்ட நபர் என்பதற்கு பொதுக் கூறுகள் சட்டம் பிரிவு 3(42) ல் நபர் என்பதற்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளவை பொருந்தும்.
ஒரு வாடிக்கையாளர் வங்கியில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகை அல்லது அவருடைய வங்கி கணக்கிலுள்ள தொகையை அவர் காலமானதற்கு பின்னர், யாருக்கு அளிக்கப்பட வேண்டும் என்று படிவத்தில் குறிப்பிட்டுள்ளாரோ அது அவருடைய விருப்பம் என்கிற காரணத்தினால், அந்த தொகையை வாரிசுரிமை சட்டப்படி அந்த நபரிடம் வங்கி அளிக்க வேண்டும்.
அந்த வாடிக்கையாளர் அந்த தொகையை பெறுவதற்கு ஒருவரை எந்த வற்புறுத்தலோ, தூண்டுதலோ, பொய் வாக்குறுதிகளோ இல்லாமல் குறிப்பிட்டிருந்து அதனை வங்கியும் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் மற்ற காரணங்களினால் அந்தத் தொகையை நியமிக்கப்பட்டவருக்கு அளிக்க மறுக்காமல் வாடிக்கையாளரின் விருப்பத்தை வங்கிகள் நிறைவேற்ற வேண்டும்.
ஒரு வாடிக்கையாளர், ஒருவரை நியமனம் செய்ததற்கு பின்னர், ஏதேனும் நடைமுறை மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால், அதுகுறித்து வங்கி நிர்வாகம் அந்த வாடிக்கையாளருக்கு தகவல் தெரிவித்து, அந்த படிவத்தில் தேவைப்படும் மாறுதல்களை செய்யுமாறு வங்கி நிர்வாகம் அந்த வாடிக்கையாளரிடம் கோர வேண்டும். அந்த வாடிக்கையாளர் உயிரோடு இருந்தால் இதனை வங்கி நிர்வாகம் நிறைவேற்றிக் கொள்ளலாம். வாடிக்கையாளர் உயிரோடு இல்லை என்றால் வங்கி நிர்வாகத்திற்கு வாடிக்கையாளரின் விருப்பத்தை நிறைவேற்றுவதை தவிர வேறு வழியில்லை. Nominated Person டம் பணத்தை கொடுத்தே ஆக வேண்டும்.

உங்களின் நிலத்தை அளக்க வேண்டும் என்றால்?

Image may contain: text
உங்களின் நிலத்தை அளக்க வேண்டும் என்றால்?
அளவீடு செய்ய நினைக்கும் நிலம் மாநகராட்சிக்கு உட்பட்டதாக இருந்தால் மாநகராட்சி ஆணையரை அணுக வேண்டும். மாநகருக்கு என்று தனி சர்வேயர்கள் உண்டு. இதற்கு செட்டில்மென்ட் சர்வே என்று பெயர்.
நகராட்சிக்கு உட்பட்ட நிலம் என்றாலும் மேலே சொன்னது போலத்தான் விண்ணப்பிக்க வேண்டும்.
பேரூராட்சி என்றால் அதற்கு E. O எனப்படும் செயல் அலுவலரை அணுக வேண்டும். இங்கேயும் நில அளவையர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு ஸ்டீரிட் சர்வேஎன்று வழக்கத்தில் சொல்வார்கள்.
கிராமப் பகுதிகளில் என்றால் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். முன்பெல்லாம் அரசு கருவூலத்தில் பணம் செலுத்தினால் நிலத்தை அளந்து தருவார்கள். தற்போது அனைத்தும் வங்கி மயமாகிவிட்டது. வங்கியில் தான் பணம் கட்ட வேண்டும்.
ஒரு சர்வே எண்ணில் எத்தனை உட்பிரிவுகள் வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கு ஏற்றார் போலத்தான் பணம் கட்ட வேண்டும். ஒரு உட்பிரிவுக்கு ரூ. 40/- என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது உங்கள் சர்வே எண் 16 என்று வைத்துக் கொள்ளுங்கள். 16ல் உட்பிரிவுகளாக 2, 3, 2A, 3A, 4A, 5A என இருக்கிறது. இந்த நிலங்கள் எல்லாம் ஒருவருக்கே சொந்தமானது என்றால், ஆறு உட்பிரிவுகளுக்கும் சேர்த்து ரூ. 240/- கட்ட வேண்டும். இதை வங்கி செல்லான் மூலம் வங்கியில் செலுத்த வேண்டும். இந்த செல்லானை கட்டாயமாக விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன், வங்கி செல்லான், கிரையப் பத்திரம், மூலப் பத்திரம், பட்டா ஆகியவற்றை இணைக்க வேண்டும். தாசில்தாருக்கு அல்லது ஆணையருக்கு அல்லது செயல் அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவர் மனுவை பரிசீலித்து சர்வேயருக்கு அனுப்பி வைப்பார்.
15 நாட்களுக்குள் நிலத்தை சர்வேயர் அளந்து தர வேண்டும். அளவீடு சரியாக இருக்கிறதா? வேறு ஏதாவது பிரச்சனைகள் இருக்கிறதா? என்பதை சொல்ல வேண்டும். அதற்கு அடுத்த 15 நாட்களுக்குள் நிலத்தை பிரித்து அளந்து, அதற்கான அத்தாட்சியை சம்மந்தப்பட்ட நபருக்கு கொடுக்க வேண்டும்.
நிலத்தை அளப்பதற்கு முன்பாக சம்மந்தப்பட்ட நபருக்கும், சுற்றி இருப்பவர்களுக்கும் அறிவிப்பு கொடுக்க வேண்டும்

Wednesday, December 5, 2018

இந்து வாரிசுரிமை சட்டம் , 1925

Image may contain: text
மற்ற ஊர்களைப் போல சென்னை, மும்பை, கல்கத்தா நகரங்களில் வசிப்பவர்கள் உயில் எழுத இயலாது. இவர்களுக்கு உயிலில் சில விதிவிலக்குகள் உண்டு. அதாவது வாரிசுகளுக்கு சமபங்காக பிரிக்காமல் தன்னுடைய விருப்பப்படி ஒருவர் உயில் எழுதியிருந்தால் நீதிமன்ற அனுமதியுடன் தான் உயிலை செல்லுபடியாக்க முடியும். அதேபோல் யாருக்கு உயில் எழுதி வைக்கப்படுகிறதோ அவர்கள் சாட்சிக் கையெழுத்து போடக்கூடாது. அப்படி போட்டால் அந்த உயில் செல்லுபடியாகாது.
உயில் பற்றி இந்து வாரிசுரிமை சட்டம் , 1925 கூறுகிறது.உயிலை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். வெள்ளைத்தாளில் கூட எழுதலாம். இரண்டு சாட்சிகளை வைத்துக் கொண்டு எழுதி பாக்கெட்டில் கூட வைத்துக் கொள்ளலாம். ஆனால் உயிலை பதிவு செய்து கொண்டால் பாதுகாப்பாக இருக்கும். தீர்க்க ஆலோசனை செய்த பின்னர் 20 ரூபாய் முத்திரைத்தாளில் எழுதலாம். கண்டிப்பாக முத்திரைத்தாளில் எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை. உயிலை ஒருவர் தன் கைப்பட எழுதலாம். வழக்கறிஞர்கள் மூலமாக எழுதலாம். பத்திர எழுத்தர்கள் மூலமாகவும் எழுதலாம்.
இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். ஆனாலும் அந்தந்த ஏரியாவுக்கு உட்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்வது தான் நல்லது.
உயிலை எப்ப வேணும்னாலும் ரத்து செய்து கொள்ளலாம். ரத்து செய்து விட்டு மறுபடியும் புதிதாக உயில் எழுதலாம். இறக்கும் வரை ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் உயில் எழுதலாம். ஆனால் முந்தைய உயிலை ரத்து செய்து விட்டுதான் அடுத்த உயிலை எழுத வேண்டும்.
உயிலுக்கு சாட்சிகள் தான் முக்கியம். பதிவு செய்த உயிலாக இருந்தாலும் சாட்சிகள் வேண்டும். உயில் எழுதுபவர் ஒவ்வொரு பக்கத்திலும் அல்லது இறுதியான இடத்திலும் கையெழுத்திட வேண்டும். அப்படி கையெழுத்து இல்லை என்றால் உயில் செல்லாது. குறைந்த பட்சம் இரண்டு சாட்சிகளின் கையெழுத்து பெற வேண்டும். சாட்சிகள் கையெழுத்து இல்லை என்றால் உயில் செல்லாது. சாட்சிகளின் தகப்பனார் / கணவர் பெயர், முகவரி ஆகியவற்றையும் கட்டாயம் பெற வேண்டும்.
உயிலை எழுதும் போது வருகிற சாட்சிகளே அதனை ரத்து செய்யும் போதும் வர வேண்டும் என்று அவசியம் இல்லை. புது சாட்சிகள் கையெழுத்து வாங்கி உயிலை ரத்து செய்யலாம்.
உயிலை எழுதி வைப்பவர் பிறரிடம் சொல்லாத வரை அவர் எழுதியுள்ள உயிலின் விவரம் யாருக்கும் தெரியாது. அப்படி தெரியாத போது தானாக வாரிசுகளுக்கு சொத்துக்கள் வந்து சேர்ந்துவிடும். அதனால் உயில் எழுதி வைப்பவர் நம்பிக்கையான நபர்களிடம் சொல்லி வைக்க வேண்டும். இளம் வயதுடைய ஆட்களை சாட்சிகளாக வைத்துக் கொள்ள வேண்டும். யாரிடமாவது உயில் பற்றிய விவரத்தை சொல்லி வைக்க வேண்டும். அவரிடம் உயிலின் நகலை கொடுத்து வைக்க வேண்டும். ஆனால் இதெல்லாம் நம்பிக்கையை பொறுத்தது.
உயில் எழுதி வைத்தவர் அதனை பதிவு செய்யும் முன் இறந்து விட்டால், அதனை உயிலின் படி நிறைவேற்றுபவராக அல்லது வேறு வகையாகவோ உரிமை உடையவர் அதனை எந்த மாவட்ட பதிவாளர் அலுவலகம் அல்லது சார் பதிவாளர் அலுவலகத்திலும் பதிவுக்காக தாக்கல் செய்யலாம் என பதிவுச் சட்டத்தின் விதி 69 மற்றும் பிரிவு 40 கூறுகிறது. 
பதிவு செய்யாமல் இறந்து விட்டார் என்ற காரணத்திற்கான மனுவை கொடுக்க வேண்டும். மனு கொடுப்பவரின் வாக்குமூலத்தை சார் பதிவாளர் பெற்று பின்னர் விதி 69 ன்படி விசாரணை செய்வார்.

ஊராட்சிகள் சட்டம், 1958

Image may contain: text
ஊராட்சிகள் சட்டம், 1958 
ஊராட்சி கூட்டங்களை கூட்ட ஏற்பாடு செய்வதுடன் அக்கூட்டங்களுக்கு தலைமை வகித்து நடத்துவதும் தலைவரின் கடமையாகும். ஊராட்சியில் பராமரிக்கப்படும் அனைத்து ஆவணங்களையும் எப்போதும் பார்வையிட தலைவருக்கு அதிகாரம் உண்டு. சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி அனைத்து கடமைகளையும், அதிகாரங்களையும் செயல்படுத்த தலைவருக்கு அதிகாரம் உண்டு என ஊராட்சிகள் சட்டம் பிரிவு 52(2) கூறுகிறது.
ஊராட்சி தலைவர் பதவி காலியாக இருந்தால், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில் அந்த தலைவர் பொறுப்பு முழுவதும், துணைத் தலைவரை சாரும் என பிரிவு 54(1) கூறுகிறது.
ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகள் காலியாக இருந்தாலோ அல்லது தலைவர் பதவி காலியாக இருந்து, துணைத் தலைவர் 30 நாட்களுக்கு மேல் ஊராட்சி பகுதியில் இல்லாமலிருக்கும் நிலை ஏற்பட்டாலோ அல்லது உடல்நலக் குறைவு காரணமாக 30 நாட்களுக்கு மேல் கடமையாற்ற முடியாத நிலைமையில் அவர் இருந்தாலோ, ஊராட்சி மன்றத் தலைவரின் பொறுப்பையும், கடமையையும் மீண்டும் தலைவரோ, துணைத் தலைவரோ ஏற்றுக் கொள்கின்ற வரையிலும் சம்மந்தப்பட்ட கோட்டாட்சியர் அந்தப் பொறுப்புகளை ஏற்று நிறைவேற்ற வேண்டும் என பிரிவு 54(2) கூறுகிறது. அந்த சமயங்களில் கோட்டாட்சியரே ஊராட்சியின் தலைவராக கருதப்படுவார்.
ஊராட்சி மன்ற தலைவர் தனது பொறுப்புகளில் சிலவற்றை தனது விருப்பத்தின் பேரில் துணைத்தலைவர் வசம் எழுத்து மூலமாக ஒப்படை செய்யலாம். ஆனால் ஏதாவது பொறுப்பினையோ, அதிகாரத்தினையோ விட்டுக் கொடுக்க முடியாது என்று ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தால் துணைத் தலைவர் வசம் ஒப்படைக்க முடியாது என பிரிவு 54(4) கூறுகிறது.
ஊராட்சி மன்ற தலைவர் 30 தினங்களுக்கு மேல் தொடர்ச்சியாக ஊராட்சி பகுதியில் இல்லாமல் இருந்தாலோ அல்லது உடல்நலக்குறைவு காரணமாக 30 தினங்களுக்கு மேல் கடமையை செய்ய முடியாத நிலைமையில் இருந்தாலோ அப்போது அவர் பொறுப்பும், கடமையும் துணைத் தலைவரை சாரும் என பிரிவு 54(5) கூறுகிறது.
ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவி காலியாக இருந்தாலோ, 30 தினங்களுக்கு மேல் அவர் ஊராட்சி பகுதியில் இல்லாமல் இருந்தாலோ அல்லது உடல்நலக்குறைவு காரணமாக 30 தினங்களுக்கு மேல் தனது கடமையை செய்ய முடியாத நிலையிலிருந்தாலோ தலைவர் தமது அதிகாரங்களில் சிலவற்றை ஏதாவது ஒரு உறுப்பினர் வசம் ஒப்படைக்கலாம். அவ்வாறு அதிகாரம் பெறும் உறுப்பினர் " தலைவர் டெலிகேட்" என்று அழைக்கப்படுவார் என பிரிவு 54(6) கூறுகிறது.

Saturday, December 1, 2018

பணிக்கொடையை தீர்ப்புக்கு முன்பாக பற்றுகை

முருகையா என்பவர் பணத்தை வசூலிப்பதற்காக X என்பவர் மீது ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை தாக்கல் செய்யும்போதே முருகையா X ன் பணிக்கொடையை தீர்ப்புக்கு முன்பாக பற்றுகை செய்ய வேண்டும் என்று கோரி ஒரு இடைக்கால மனுவையும் தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்பு, பணிக்கொடையை தீர்ப்புக்கு முன்பாக பற்றுகை செய்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து X மேல்முறையீடு எதுவும் தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் X இறந்து போனதால், அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் வழக்கில் சேர்க்கப்பட்டு விசாரணை நடந்தது. விசாரணைக்கு பின் முருகையாவுக்கு சாதகமாக வழக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதனை எதிர்த்து பிரவாதிகள் மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்தனர். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதன்பிறகு முருகையா பணத்தை வசூலிக்க ஏதுவாக, X ன் பணிக்கொடைத் தொகையை பற்றுகை செய்து தனக்கு அளிக்குமாறு கூறி ஒரு நிறைவேற்றுதல் மனுவை தாக்கல் செய்தார். மேலும் ஏற்கனவே பணிக்கொடைத் தொகை நீதிமன்றத்தால் பற்றுகை செய்யப்பட்டுள்ளதால் அதனை தனக்கு வழங்க வேண்டும் என்றும் கோரினார்.
இந்நிலையில் பிரதிவாதிகள் பணிக்கொடையை நீதிமன்றம் பற்றுகை செய்ய அதிகாரமில்லை என்று கூறி, நீதிமன்றத்தால் ஏற்கனவே பற்றுகை செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ஒரு இடைக்கால மனுவை தாக்கல் செய்தனர். அதனை விசாரித்த நீதிமன்றம் முருகையாவின் நிறைவேற்றுதல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அதனை எதிர்த்து முருகையா மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார்.
வழக்கை நீதிபதி திரு. T. இரவீந்திரன் விசாரித்தார்.
உரிமையியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 60( G) ல் பணிக்கொடைத் தொகையை பற்றுகை செய்ய முடியாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த விலக்கானது தீர்ப்புக் கடனாளிக்கு மட்டுமே பொருந்தும். அவருடைய வாரிசுகளுக்கு பொருந்தாது. பணிக்கொடைத் தொகையை இறந்து போன தீர்ப்புக் கடனாளியின் வாரிசுகள் சட்டப்படி பெற உரிமையுடையவர்கள் ஆவார்கள். பணிக்கொடைத் தொகை தீர்ப்புக் கடனாளியின் ஒரு சொத்தாகும்.
ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடைத் தொகையை பற்றுகை செய்வதிலிருந்து உரிமையியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 60(g) ல் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த பணிக்கொடைத் தொகை ஓய்வூதியதாரரின் சட்டப்பூர்வ வாரிசுகளிடமிருந்தால் அதனை பற்றுகை செய்வதற்கு அந்த சட்டப் பிரிவில் விலக்கு அளிக்கப்படவில்லை.
பணிக்கொடைத் தொகையானது ஓய்வூதியதாரரின் சொத்து என்கிற வகையில் அவருடைய சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு வழங்கப்படுவதால், வாரிசுகள் உரிமையியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 60( g) ல் கூறப்பட்டுள்ள பலனை பெறுவதற்கு முடியாது.
எனவே முருகையாவின் மனுவை ஏற்றுக் கொள்கிறேன். பணிக்கொடைத் தொகையை முருகையாவிடம் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
CRP. NO - 470/2006 DT - 14.7.2017
முருகையா வெள்ளார் Vs வேலம்மாள் மற்றும் பலர்
2017-6-MLJ-416  2017-5-LW-197

புகார்-விசாரணை

Image may contain: text
பொதுவாக புலன் விசாரணையில் தலையிடும் அதிகாரம் குற்றவியல் நடுவருக்கு இல்லை. அதேபோல் உயர்நீதிமன்றமும் தேவையில்லாமல் புலன் விசாரணையில் தலையிடுவது இல்லை. ஆனால் காவல்துறையினர் விசாரணை என்கிற பெயரில் பொதுமக்களை துன்புறுத்துவதாக நிறைய வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகிறது.
புலன் விசாரணை அதிகாரிகள் குற்றவியல் நடைமுறைச் சட்டம் அத்தியாயம் 12 ல் கூறப்பட்டுள்ள விஷயங்களை பின்பற்றி தான் விசாரணை நடத்த வேண்டும். துன்புறுத்தல் என்பதற்கு விரிவான அர்த்தமுள்ளது. காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் பொதுமக்களை துன்புறுத்துவதை ஏற்க முடியாது.
அதனால் காவல்துறையினர் புலன் விசாரணை நடத்தும் போது கீழ்கண்ட நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
1. புகாரில் குறிப்பிட்டுள்ள எந்தவொரு நபரையும் விசாரணைக்கு அழைக்கும் போது அல்லது அந்த சம்பவம் குறித்து எந்தவொரு சாட்சி யையும் விசாரணைக்கு அழைக்கும் போது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 160 ன் கீழ் எழுத்து மூலமான அழைப்பாணையில் அந்த விசாரணை / புலன் விசாரணைக்கு அவர்கள் முன்பு எந்தத் தேதியில், எந்த நேரத்தில் முன்னிலையாக வேண்டும் என்று குறிப்பிட்டு, அந்த அழைப்பாணையை அனுப்ப வேண்டும்.
2. அந்த விசாரணையை காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பொது நாட்குறிப்பு / காவல் நிலைய நாட்குறிப்பு / தின நாட்குறிப்பு போன்றவற்றில் பதிவு செய்ய வேண்டும்.
3. விசாரணை / புலன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நபரை காவல்துறை அதிகாரிகள் துன்புறுத்தக்கூடாது.
4. முதற்கட்ட விசாரணை அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதற்காக உச்சநீதிமன்றம் " லலிதாகுமாரி Vs உத்திர பிரதேச அரசு மற்றும் பலர் (2012-2-SCC-1)" என்ற வழக்கில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
மேற்கண்ட நெறிமுறைகளை காவல்துறையினர் பின்பற்ற தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. OP. NO - 22365/2017 DT - 14.10.2017
M. அருண்வேல்குமார் Vs காவல் கண்காணிப்பாளர், சேலம் மற்றும் பலர்
2017-2-TLNJ-CRL-454