Monday, April 8, 2019

காவல்துறையினரின் இறுதி அறிக்கை - காலவரையறை

Image may contain: text
காவல்துறையினரின் இறுதி அறிக்கை - காலவரையறை
3 ஆண்டுகள் தண்டனை வழங்கக்கூடிய குற்றச் செயல் கொண்ட ஒரு வழக்கில் காவல்துறையினர் 3 ஆண்டுகளுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு குறிப்பிட்ட காலவரையறைக்குள் காவல்துறையினர் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய தவறிவிட்டால், அந்த காலதாமதத்தை மன்னிக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவை விசாரிப்பதற்கு முன்பு எதிரிகளுக்கு அதுகுறித்து ஒரு அறிவிப்பு அனுப்பி எதிரிகளின் வாதத்தை கேட்ட பின்புதான் அந்த மனுவின் மீது குற்றவியல் நடுவர் உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் அத்தியாயம்
36ல் குற்றச் செயல்களை நீதிமன்றக் கோப்பிற்கு ஏற்றுக் கொள்வதற்கான காலவரையறை பற்றி கூறப்பட்டுள்ளது. குற்றச் செயலின் தன்மையை பொறுத்து, ஒவ்வொரு குற்றங்களுக்கும் வெவ்வேறு காலவரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
கு. வி. மு. ச பிரிவு 192ன் கீழ் நீதிமன்ற கோப்பிற்கு ஏற்றுக்கொள்ள கூடிய சில பிரிவு குற்றச் செயல்களுக்கு 3 ஆண்டுகள் காலவரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த காலவரையறையை நிர்ணயிப்பதற்கு, குற்றச் சம்பவம் நடைபெற்ற நாளிலிருந்து காலவரையறை கணக்கிடப்பட வேண்டும். சில சூழ்நிலைகளில் அவ்வாறு காலவரையறை கணக்கிடுவதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் விதிவிலக்கு அளிக்கிறது. கு. வி. மு. ச பிரிவு 468ல் குறிப்பிடப்பட்டுள்ள காலவரையறையை நீட்டித்து காலதாமதத்தை மன்னிப்பதற்கு கு. வி. மு. ச பிரிவு 473 பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் கு. வி. மு. ச பிரிவு
473ல் நீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்டுள்ள உளத்தேர்வு அதிகாரம் இரண்டு காரணங்களின் அடிப்படையில் கட்டுபடுத்தப்படுகிறது. முதலாவதாக அந்த காலதாமதம் ஏற்பட்டதற்கான காரணம் நியாயமானதாக இருக்க வேண்டும் இரண்டாவது நீதியின் பொருட்டு அந்த காலதாமதத்தை மன்னிக்க வேண்டியது அவசியமானது என நீதிமன்றம் மனநிறைவடைய வேண்டும். இந்த இரண்டு காரணங்களின் அடிப்படையில் காலவரையறை கடந்து காவல்துறையினரால் தாக்கல் செய்யப்படும் இறுதி அறிக்கையை ஏற்றுக் கொள்வதற்கான கால கெடுவினை நீட்டித்து ஓர் உத்தரவினை விசாரணை நீதிமன்றம் பிறப்பிக்கலாம்.
நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த உளத்தேர்வு அதிகாரத்தை சரியான சட்ட நெறிமுறைகளுக்குட்பட்டு பயன்படுத்த வேண்டும். விருப்பத்திற்கு ஏற்ப சரியான காரணங்கள் ஏதும் இல்லாமல் நீதிமன்றம் உளத்தேர்வு அதிகாரத்தை பயன்படுத்தக்கூடாது. நீதிமுறை அதிகாரத்திற்கும், நிர்வாகமுறை அதிகாரத்திற்கும் வேறுபாடுகள் உள்ளது. நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் எந்த ஒரு உத்தரவும் ஒரு நபருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது ஒரு வழக்கின் எதிரி உட்பட எந்தவொரு நபரின் நலத்திற்கும், உரிமைக்கும் பாதிப்பை ஏற்படுத்த இதில் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் எதிரிகளுக்கு அது குறித்து ஒரு அறிவிப்பு அனுப்ப வேண்டும். இது குறித்து ஏற்கனவே உச்சநீதிமன்றம் "மகாராஷ்டிரா அரசு Vs சரத் சந்தர விநாயக் டோங்கிரி மற்றும் பலர்
(1995-1-SCC-42)" என்ற வழக்கில் கூறியுள்ளது.
ஓராண்டு முதல்
3 ஆண்டுகளுக்கு மிகாத சிறை தண்டனை விதிக்கக்கூடிய வழக்குகளில், குற்றத்தை ஏற்றுக் கொள்வதற்கான காலவரையறை 3 ஆண்டுகள் என்று கு. வி. மு. ச பிரிவு 468 2(c) ல் கூறப்பட்டுள்ளது. புகார் தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து 3 ஆண்டுகள் முடிவடைவதற்குள் இறுதி அறிக்கையை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் காலதாமதம் ஏற்பட்டதற்கான சரியான காரணங்களை கூறி அதனை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக் கு. வி. மு. ச பிரிவு 473ன் கீழ் மனுதாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் "M/s Jothimani (CRL.OP. NO - 1730/2009) என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது. 
ஒரு வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதில் காலதாமதம் ஏற்பட்டிருந்தால், அந்த காலதாமதத்தை மன்னிப்பதற்கு தாக்கல் செய்யப்படும் மனு குறித்து அந்த வழக்கு எதிரிகளுக்கு அறிவிப்பு அனுப்ப வேண்டும் என்றும், அவ்வாறு அறிவிப்பு அனுப்பாமல் அல்லது அவர்களுக்கு தெரியாமல் நீதித்துறை நடுவர் உத்தரவு பிறப்பிப்பது தவறாகும் என உச்சநீதிமன்றம் "மகாராஷ்டிரா அரசு Vs சரத் சந்திர விநாயக் டோங்கிரி" என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது. 
எனவே இறுதி அறிக்கை தாக்கல் செய்வதில் ஏற்பட்ட காலதாமதத்தை மன்னிக்க கோரி தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் எதிரிக்கு ஓர் அறிவிப்பினை கொடுத்து அவர் வாதத்தையும் கேட்ட பின்பு தான் குற்றவியல் நடுவர் காலதாமதத்தை மன்னிக்க கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களில் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. 
CRL. RC. NO - 1045/2011, DT - 2.11.2016
S. Bala Subramaniyan Vs Asst Commissioner, Crime Branch (West), Coimbatore
(2016-4-MLJ-CRL-764)

Tuesday, March 12, 2019

பொய் ஆவணம் - தண்டணை

Image may contain: text
வழக்கின் சுருக்கம்
திருமதி. டோர்ஸ் விக்டர் என்பவருக்கு வள்ளியூர் கிராமத்தில் வீட்டு மனைகள் இருந்தது.  ஜவகர்ராஜ் என்பவர் அந்த சொத்துக்களை மோசடியாக அபகரித்து கொள்ள வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் அந்த சொத்துக்களின் உரிமையாளரான டோர்ஸ் விக்டர் என்பவருக்கு பதிலாக வேறொரு பெண்ணை ஆள்மாறாட்டம் செய்து அவர் பெயருக்கு ஒரு பவர் ஆவணத்தை பதிவு செய்து கொண்டார். பின்னர் அந்த மோசடி பவர் ஆவணத்தை பயன்படுத்தி மேற்படி சொத்துக்களை ராஜபாண்டி என்பவரிடம் ரூ. 50,0000/-க்கு அடமானம் வைத்தார்.
மோசடி தெரிந்தவுடன்....
மேற்படி தனது சொத்துக்கள் ஆள்மாறாட்டம் மூலம் அபகரிக்கப்பட்ட விஷயத்தை கேள்விப்பட்ட டோர்ஸ் விக்டர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் ஜவகர்ராஜ் மற்றும் ராஜபாண்டி ஆகியோர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 420,423,424 465 மற்றும் 109 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் விசாரணை நடத்தி இறுதி அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் திருமதி. டோர்ஸ் விக்டர் இறந்து விட்டார்.
மனுதாரரின் மரணத்திற்குப் பிறகு...வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜவகர்ராஜ் பிரிவு 465 ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி 2 ஆண்டு சிறை தண்டனையும், ராஜபாண்டிக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியது. 
குற்றவாளிகள் செய்த மேல்முறையீடு
அதனை எதிர்த்து எதிரிகள் மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்டது. அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் எதிரிகளை விடுதலை செய்தது.
எதிரிகளை விடுதலை செய்யக் காரணம் என்ன?" இந்த வழக்கில் ஆள்மாறாட்டம் செய்த பெண்ணை பற்றி புலன்விசாரனை அதிகாரி தனது இறுதியறிக்கையில் எதுவுமே கூறவில்லை. முக்கிய குற்றவாளியான ஆள்மாறாட்டம் செய்த பெண்ணை விசாரிக்காமல், அந்தப் பெண்ணால் ஆதாயம் அடைந்த எதிரிகளை மட்டும் வழக்கில் சேர்த்தது தவறு. முக்கிய எதிரிக்கு தண்டனை வழங்காமல் மற்ற எதிரிகளுக்கு தண்டனை வழங்கியதை ஏற்க முடியாது " என்று உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.
மனுதாரரின் மகள் உச்சநீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடுஉயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டோர்ஸ் விக்டரின் மகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுகளை தாக்கல் செய்தார். வழக்கை இரு நீதிபதிகள் விசாரித்தனர்.
பொய்யாவணம் புனைதல் என்பதற்கான விளக்கம் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 463 லும், பொய்யாவணம் புனைதல் என்கிற குற்றச் செயலுக்குள் எவையெல்லாம் அடங்கும் என பிரிவு 464 லும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட இரண்டு சட்டப் பிரிவுகளிலும் கூறப்பட்டுள்ள காரணிகள் நிரூபிக்கப்பட்டிருந்தால் மட்டுமே ஒருவருக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 465 ன் கீழ் தண்டனை வழங்க முடியும்.
பொய் ஆவணம் குறித்து உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள்உச்சநீதிமன்றம் " முகமது இப்ராகிம் மற்றும் பலர் Vs பீகார் மாநில அரசு மற்றுமொருவர் (2009-8-SCC-751)" என்ற வழக்கில், ஒரு நபர் பொய்யாவணம் புனைந்தவர் என்று கருதப்படுவதற்கு கீழ்க்கண்ட காரணிகள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.எவையெல்லாம் பொய் ஆவணங்கள்?
1. ஒருவருக்கு சொந்தமான அல்லது வேறொருவரால் அங்கீக்கப்பட்டுள்ள உரிமை குறித்து ஓர் உரிமையை கோருதல் அல்லது ஓர் ஆவணத்தை புனைதல்
2. ஓர் ஆவணத்தில் மாற்றம் செய்தல் அல்லது மோசடி செய்தல் அல்லது
3. ஏமாற்றி ஓர் ஆவணத்தை எழுதிப் பெறுதல் அல்லது ஒரு நபர் சுயநினைவில்லாமல் உள்ளபோது அந்த நபரிடமிருந்து ஆவணத்தை எழுதிப் பெறுதல்
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 464
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 464 ல் விளக்கம் 2 ல் கூறப்பட்டுள்ளதன் அடிப்படையில் பார்க்கும் போது, ஓர் பொய்யாவணம் புனையப்பட்டிருந்து அந்தப் பொய்யாவணத்தை புனைந்த நபர்தான் அந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்று கருதப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அந்த நபரை பொய்யாவணம் புனைந்தவர் என்று கருத முடியாது.
பொய்யாவணம் என்பது மோசடி என்கிற விளக்கத்திற்குள் வருகிறது. மேற்படி குற்றச்சாட்டுகளை நேரடி சாட்சியங்கள் அல்லது நிரூபிக்கப்பட்ட சங்கதிகள் மூலமாக அனுமானிக்க வேண்டும். இந்த வழக்கில் எதிரிகள் ஒரு பொய்யாவணத்தை புனைந்துள்ளார்கள் அல்லது ஓர் ஆவணத்தின் ஒரு பகுதியை பொய்யாக புனைந்து அதன் அடிப்படையில் அடமான ஆவணத்தை எழுதியுள்ளார்கள் என்று விசாரணை நீதிமன்றம் கூறவில்லை. எனவே அவர்கள் பொய்யாவணத்தை புனைந்தவர்களாக கருத முடியாது. ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட பெண்தான் பொய்யாவணத்தை புனைந்தவர் ஆவார்.
விசாரணையில் உள்ள ஓட்டை வழக்கை விசாரித்த காவல் ஆய்வாளர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட பெண் குறித்து எந்த விசாரணையும் செய்யவில்லை. இந்த எதிரிகளுக்கும், ஆள்மாறாட்டம் செய்த பெண்ணுக்கும் உள்ள தொடர்பு குறித்து எதுவும் கூறவில்லை. காவல் ஆய்வாளர் முறையாக விசாரணை செய்யவில்லை என்பதற்கு இந்த வழக்கு சிறந்த உதாரணம் ஆகும். காவல் ஆய்வாளர் தன் கடமையை செய்யவில்லை. பொறுப்புடனும் செயல்படவில்லை. ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை கண்டுபிடிக்க காவல் ஆய்வாளர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
காவல் ஆய்வாளரின் மோசமான விசாரணை
பவர் ஆவணம் டோர்ஸ் விக்டரால் எழுதிக் கொடுக்கப்படவில்லை என்பதும், அந்த பவர் ஆவணத்தின் மூலமாக எதிரிகள் பயனடைந்துள்ளார்கள் என்பதும் வழக்கு ஆவணங்களிலிருந்து தெரிய வந்ததாலும், எதிரிகளுக்கு தண்டனை அளிக்க முடியாது. காவல் ஆய்வாளரின் மோசமான புலன் விசாரணை காரணமாக இந்த வழக்கு பாதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் மோசமான செயல்களால் தான் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எதிரிகளை விடுதலை செய்வதை தவிர வேறு வழியில்லை. பொய்யாவணத்தை யார் புனைந்துள்ளார்களோ அவர்களுக்கு தான் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 465 ன் கீழ் தண்டனை அளிக்க முடியும் என்று கூறி எதிரிகளை விடுதலை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்றம்
CRL. A. Nos - 359&360/2010,  Dt - 11.05.2018
ஷீலா செபாஸ்டியன் Vs R. ஜவஹர்ராஜ் மற்றுமொருவர்
2018-3-MLJ-CRL-39
நன்றி : வழக்கறிஞரும் எனது நண்பருமான  Dhanesh Balamurugan அவர்களுக்கு

Tuesday, February 12, 2019

கோர்ட்டில் போலியாவணம் தாக்கல்! யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

கோர்ட்டில் போலியாவணம் தாக்கல்! யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?
பிரியங்கா என்பவர் மீது விஜய் என்பவர் ஒரு காசோலை மோசடி வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் X என்பவர் தனக்கு சொந்தமாக விவசாய நிலங்கள் இருப்பதாக கூறி, அதற்கான ஆதாரங்களை சமர்பித்து பிரியங்காவிற்கு பிணையதாரராக இருந்து ஜாமீன் வழங்கினார்.
அதன்பிறகு விஜய் பிணையதாரரான X ஐ பற்றி விசாரித்துள்ளார். அப்பொழுதுதான் X க்கு எந்த சொத்தும் இல்லை என்ற விபரமும், அவன் போலியாக சொத்து சம்மந்தப்பட்ட ஆவணங்களை தயார் செய்து இருப்பதும் தெரிய வந்தது. மேலும் இதே மோசடி ஆவணங்களை வைத்து வேறோரு வழக்கிலும் பிணையம் கொடுத்திருப்பது தெரிய வந்தது.
அதனால் பாதிக்கப்பட்ட விஜய், பிரியங்கா மற்றும் X ஆகிய இருவரும் சேர்ந்து கூட்டுசதி செய்து மோசடி ஆவணங்களை தயார் செய்துள்ளதாக கூறி குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்க கோரி ஒரு தனிநபர் புகாரை தாக்கல் செய்தார். அந்த மனுவை பெற்றுக் கொண்ட நீதிபதி அதனை விசாரணைக்காக காவல்துறைக்கு அனுப்பி வைத்தார். அதனை விசாரித்த காவல் ஆய்வாளர், பிரியங்காவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதிபதி பிரியங்காவை ரிமாண்ட் செய்ய மறுத்ததோடு, FIR யும் ரத்து செய்து, எதிரிகளை விடுதலை செய்தும் உத்தரவிட்டார். தனது உத்தரவுக்கு காரணமாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 195 ன் கீழான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு நீதிமன்றமோ அல்லது அதன் அலுவலரோ காவல்துறையில் ஒரு புகாரை கட்டாயம் அளித்திருக்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் அவ்வாறு எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.
(பிரிவு 195 - பொது ஊழியரின் சட்டப்பூர்வமான அதிகாரத்தை அவமதித்தற்காகவும், பொது நீதிக்கு விரோதமான குற்றங்களுக்காகவும், சாட்சியத்தில் தரப்படும் ஆவணங்கள் தொடர்பான குற்றங்களுக்காகவும் வழக்கு தொடுத்தல்)
மேலே கண்ட உத்தரவை எதிர்த்து விஜய் பாம்பே உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்சநீதிமன்றம் " பால்சிங் மார்வா Vs மீனாட்சி மார்வா" (2005-4-SCC-370)" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை சுட்டிக்காட்டி, நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஒரு வழக்கில் ஏற்கனவே சான்றாவணமாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில், அந்த ஆவணம் நீதிமன்றத்தின் பொறுப்பில் இருக்கும் நிலையில், அந்த ஆவணத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால் தான் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 195 ல் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் பொருந்தும். ஒரு ஆவணம் நீதிமன்றத்தில் சான்றாவணமாக குறியீடு செய்யப்படுவதற்கு முன்பு மோசடியாக தயாரிக்கப்பட்டதாக இருந்தால் அதுகுறித்து நீதிமன்றம் புகார் அளிக்க தேவையில்லை. அதனால் பாதிக்கப்பட்ட தனிநபர் ஒரு புகாரை தனிப்புகாராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்.
எனவே இந்த வழக்கில் நீதித்துறை நடுவர் பிறப்பித்த உத்தரவு தவறானது. எதிரிகள் மீது வழக்கே இல்லாத நிலையில் எப்படி நடுவர் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார் என்று தெரியவில்லை. ஆகையால் குற்றவியல் நடுவர் பிறப்பித்த உத்தரவு அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. காவல்துறை தொடர்ந்து இந்த வழக்கில் புலன் விசாரணையே மேற்கொள்ள வேண்டும் என்று உய‌ர் நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு பிறப்பித்தது.
Criminal Appeal No - 1401/2011
Vijay Vs State of Maharastira and others
2013-2-CRIMES-BOM-296

Monday, February 11, 2019

சான்றாவணங்கள் குறியீடு

Image may contain: text

அசல் ஆவணங்களின் புகைப்பட நகல்களை சான்றாவணங்களாக ஏற்றுக்கொள்ளக்கூடாது எனவும், புகைப்பட நகல்கள் பொதுவாக அசல் ஆவணங்களோடு ஒத்துப் போவதில்லை எனவும் கீழ்கண்ட வழக்குகளில் தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளது. 

சிறப்பு வட்டாட்சியர், பொன்னேரி வட்டம் Vs K. லீலம்மாள் மற்றும் பலர் (2000-1-LW-402)
தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன் Vs N. சுவாமிநாதன் மற்றும் பலர் 
(2002-4-LW-147)
மீனாட்சியம்மாள் மற்றும் பலர் Vs கோபால கிருஷ்ணன் மற்றும் பலர்
(2004-3-CTC-481)
பொன்னம்பலம் Vs பிச்சை
(2008-2-LW-809)
மேலும் உச்சநீதிமன்றம் "ஷாலிகுமார் கெமிக்கல்ஸ் குவார்ட்ஸ் லிமிடெட் Vs சுரேந்திரா ஆயில் அண்ட் டால் மிக்ஸ்" என்ற வழக்கில், பதிவுச் சான்றிதழின் புகைப்பட நகல்களை சான்றாவணங்களாக குறியீடு செய்வதற்கு பிரதிவாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், விசாரணை நீதிமன்றம் அந்த புகைப்பட நகல்களை சான்றாவணங்களாக குறியீடு செய்வதற்கு அனுமதி அளிக்கக்கூடாது, மறு தரப்பினர் புகைப்பட நகல்களை சான்றாவணங்களாக குறியீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும் நீதிமன்றம் புகைப்பட நகல்களை சான்றாவணங்களாக குறியீடு செய்ய அனுமதிக்க கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
எனவே நீதிமன்றத்தில் ஆவணத்தின் புகைப்பட நகல்களை சான்றாவணங்களாக குறியீடு செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRP. NO - 1963/2013  dt - 1.6.2017
அவனி Vs சோமசுந்தரம் மற்றும் பலர்
2017-3-TNCJ-241

Thursday, January 31, 2019

வாய்தா பற்றி வழக்கறிஞர்

Image may contain: text
வாய்தா பற்றி வழக்கறிஞர் Dhanesh Balamurugan
ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அந்த வழக்கை விசாரிக்காமலோ அல்லது அடுத்த விசாரணைக்காகவோ ஒத்தி வைப்பது வாய்தா (Postpone) எனப்படும். 
வாய்தா வழங்கும் முறை பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 309 கூறுகிறது. பிரிவு 309 - Power to postpone or adjourn Proceedings - 
1. நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கும் அனைவரையும் விசாரித்து முடிக்கும் வரையில் ஒவ்வொரு வழக்கு விசாரணையையும் அடுத்தடுத்த நாள் தொடர்ந்து விசாரிக்க வேண்டும். வழக்கை ஒத்தி வைப்பது அவசியமானது என்று நீதிமன்றம் கருதினாலொழிய மற்றபடி வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைக்கக்கூடாது. அவ்வாறு ஒத்தி வைத்தால் அதற்கான காரணத்தை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும்.
வரம்புரையாக - இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 376, 376(அ), 376(ஆ), 376(இ), 376(ஈ)- ன் கீழான குற்றம் சம்பந்தப்பட்டதாக இருக்கும்போது, முடிந்த மட்டும் அந்த வழக்கு விசாரணையை, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளில் 2 மாதத்துக்குள் முடிக்க வேண்டும். (இது புதிதாக சட்ட எண்- 13/2013 ன் படி இணைக்கப்பட்டு 3.2.2013 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது)
2. நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதற்கு பின்னர் விசாரணை எதையும் துவக்குவதை தள்ளி வைப்பது அவசியமானது என்னும் முடிவுக்கு வருமானால் நிபந்தனைகள் அடிப்படையில் தள்ளி வைக்கலாம். ஆனால் நீதிமன்றத்தில் சாட்சிகள் முன்னிலையாகி இருந்தால் காரணமில்லாமல் தள்ளி வைக்கக்கூடாது.
3. சூழ்நிலைகள் கைமீறியதாக இருக்கும் நிலையில் வாய்தா வழங்கலாம். மற்றபடி வழக்கு தரப்பினர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக வழக்கை தள்ளி வைக்கக்கூடாது.
4. வழக்கு தரப்பினரின் வழக்கறிஞர் மற்றொரு நீதிமன்றத்தில் வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை காரணம் காட்டி வழக்கு விசாரணையை மற்றொரு தேதிக்கு மாற்றி வைக்கும்படி கோர முடியாது.
5. உரிய சந்தர்ப்பங்களில் வழக்கு செலவுத் தொகையை செலுத்த உத்தரவிடலாம்.
இதுபோக இன்னும் பல விளக்கங்கள் உள்ளது.
வழக்கு விசாரணையை துரிதப்படுத்த காவல்துறையினரின் ஒத்துழைப்பு கட்டாயம் வேண்டும். ஆனால் காவல்துறையை நீதிமன்றம் நம்பாது.
ஒரு வழக்கை ஒத்தி வைக்க வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பது நீதிமன்றத்தின் இயல்பான அதிகாரத்தை பொறுத்ததாகும். ஆனால் இந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது. வாய்தா வழங்கினால் அதற்கான காரணத்தை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும் என்று கு. வி. மு. ச பிரிவு 309(1) கூறுகிறது. ஆனால் பெரும்பாலான நீதிமன்றங்கள் இதனை பின்பற்றுவதில்லை. அதனால் தரப்பினர் ஆஜராகும் போது நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தால் தகுந்த காரணம் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை வற்புறுத்த வழக்கின் தரப்பினர்களுக்கு உரிமை உண்டு.
தகுந்த காரணம் என்பது வழக்கிற்கு தேவையான ஆவணங்கள் அல்லது வல்லுநரின் அறிக்கைகள் வர வேண்டியுள்ளது அல்லது முக்கியமான சாட்சியை அழைத்து விசாரணை செய்ய வேண்டியுள்ளது என்பன ஆகும். வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கு சாத்தியமில்லை என்ற நிலையில் தான் வாய்தா வழங்கப்படுகிறது.
வழக்கறிஞருக்கு வேறு கோர்ட்டில் வேலை இருக்கிறது என்பதெல்லாம் தகுந்த காரணம் கிடையாது.
தகுந்த காரணம் இருந்தால் நீதிமன்றம் வழக்கை 15 நாட்களுக்கு மேல் ஒத்தி வைக்கக்கூடாது.
எந்த ஒரு நீதிமன்றமும் வழக்கை விரைந்து முடிக்கவே விரும்புகிறது. ஆனால் சில வழக்கறிஞர்கள் தேவை இல்லாமல் வாய்தா கேட்பதால்தான் காலதாமதம் ஆகிறது.
எனவே தேவையில்லாமல் வாய்தா கேட்டால் கு. வி. மு. ச பிரிவு 309(2) ன் கீழ் செலவுத் தொகை தர வேண்டும் என்று கோரினால் தேவையில்லாமல் வாய்தா வழங்கப்படுவதை தவிர்க்கலாம்.
( எனக்கு தெரிந்து இதுதான் நடைமுறை)

Wednesday, January 30, 2019

ஜாதிச் சான்றிதழ் பெறும் வழிகள்

Image may contain: text
ஜாதிச் சான்றிதழ் பெறும் வழிகள்
ஐயப்பன் என்பவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அவர் பள்ளி ஆவணங்களிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பள்ளி காலத்தில் அவருக்கு அவசியம் ஏற்படாத காரணத்தினால் ஜாதிச் சான்றிதழ் பெறவில்லை. இந்நிலையில் ஐயப்பனுக்கு அரசு நலத்திட்டங்களை பெறவும், கடன் மற்றும் தேர்தல் காரணங்களுக்காகவும் ஜாதிச் சான்றிதழ் தேவைப்பட்டது. எனவே அவர் 14.6.2016 ஆம் தேதி ஜாதிச் சான்றிதழ் வழங்கும்படி கேட்டு கோட்டாட்சியரிடம் மனு அளித்தார். அந்த மனுவுடன் தனது சகோதரன், சித்தப்பா மற்றும் நெருங்கிய உறவினர்களின் ஜாதிச் சான்றிதழ்களையும், பள்ளி மாற்றுச் சான்றிதழ், சகோதரருடைய பள்ளி மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றையும் இணைத்திருந்தார். மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் அந்த மனுவை விசாரித்து அறிக்கை தருமாறு கேட்டு தாசில்தாருக்கு அனுப்பி வைத்தார்.

தாசில்தார் விசாரணை நடத்தி ஒரு அறிக்கையை கோட்டாட்சியருக்கு அனுப்பி வைத்தார். அந்த அறிக்கையை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் ஐயப்பனின் மனு மீது எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்காமல் அசால்டாக இருந்து வந்தார். அதனால் ஐயப்பன் ஒரு நினைவூட்டல் கடிதத்தை அனுப்பினார். ஆனாலும் எவ்வித பயனும் இல்லாததால் ஐயப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார்.

வழக்கை நீதிபதிகள்....

உச்சநீதிமன்றம் " பீகார் மாநில அரசு மற்றும் பலர் Vs சுமித் ஆனந்த் (2015-12-SCC-248)" என்ற வழக்கில், ஒரு குடும்ப உறுப்பினர்கள் தகுதியான ஜாதிச் சான்றிதழை வைத்திருந்தால், அந்த குடும்பத்தை சார்ந்த மற்றொரு உறுப்பினருக்கும் அதுபோன்று ஜாதிச் சான்றிதழை அரசு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

இந்த வழக்கின் மனுதாரரான ஐயப்பனின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அரசால் தாழ்த்தப்பட்டவர் என்று ஜாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கோட்டாட்சியர் ஐயப்பனுக்கு உடனடியாக ஜாதிச் சான்றிதழ் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் வேண்டுமென்றே கோட்டாட்சியர் காலதாமதம் செய்துள்ளார்.

எனவே ஆறு வாரங்களுக்குள் ஐயப்பனுக்கு கோட்டாட்சியர் ஜாதிச் சான்றிதழை வழங்க வேண்டும் என்று கூறி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

W. P. NO - 15403/2018

DT - 25.6.2018

ஐயப்பன் Vs வருவாய் கோட்டாட்சியர், இராணிப்பேட்டை, வேலூர் மாவட்டம்

2018-3-TLNJ-CIVIL-52

Friday, January 18, 2019

பட்டா வாங்க என்ன செய்ய வேண்டும்?

Image may contain: text
பட்டா வாங்க என்ன செய்ய வேண்டும்?
பட்டா வேண்டி பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது.

அதேபோல் UDR பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. 

பட்டா மாற்றம் :

பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 

1. நிலச் சொந்தக்காரர்கள் தாமே மேற்கொள்ளும் நடவடிக்கை (உரிமையை தாமே மாற்றுவது) 

2. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலோ அல்லது வருவாய்த்துறையினர் மேற்கொள்ளும் விற்பனையின் மூலமான நடவடிக்கை (கட்டாய உரிமை மாற்றம்) 

3. ஒருவருக்கு பின் ஒருவர் என்ற வாரிசுரிமை மூலமான அடிப்படையில் (வாரிசுரிமை மாற்றம்) 

தமிழ்நாட்டில் பொதுமக்கள் பட்டா பெறுவதற்கும், பட்டா மாற்றம் செய்வதற்கும் தமிழக அரசு சட்டங்களையும், விதிமுறைகளையும் உருவாக்கியுள்ளது. அதில் சில முக்கியமான பகுதிகளை நாம் அறிந்து கொண்டால் பட்டா பெறுவதும், பட்டா மாற்றம் செய்வதும் எளிதாகிவிடும். 

தமிழ்நாடு பட்டாப்பதிவு புத்தக சட்டம், 1983 :
பிரிவு 3(1) - தாசில்தார் ஒவ்வொரு நில உடமையாளருக்கும் அவர் சொந்தமாக வைத்திருக்கும் நிலத்தை பொருத்து அவர் விண்ணப்பத்தின் பேரில் பட்டா பதிவு புத்தகம் ஒன்றை வழங்க வேண்டும் 

பிரிவு 3(7) - தாசில்தார் பட்டா மாற்றம் செய்வதற்கு முன் நிலத்தில் அக்கறை கொண்டுள்ளவர்களுக்கு நியாயமானதொரு வாய்ப்பினை கொடுக்க வேண்டும் 

பிரிவு 3(9) - பட்டா பதிவு புத்தகத்தில் அடங்கியுள்ள பதிவுகள், விவரங்கள் ஆகியவற்றுக்காக ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் பட்டா பதிவு புத்தக பதிவேடு பராமரிக்கப்பட்டு வர வேண்டும் 

பிரிவு 3(10) - உரிய கட்டணங்கள் செலுத்தப்படுவதன் பேரில் நில உடமையாளருக்கு பட்டா பதிவு புத்தகம் வழங்கப்பட வேண்டும். 

பிரிவு 10 - பட்டாவில் மாற்றம் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் முதலில் மனுவை தாசில்தாரிடம் தான் கொடுக்க வேண்டும். தாசில்தாரே முதன்மை அதிகாரி ஆவார். 

பிரிவு 12 - தாசில்தார் உத்தரவின் மீது வருவாய் கோட்டாட்சியரிடம் முதல் மேல்முறையீடு செய்யப்பட வேண்டும் 

பிரிவு 13 - வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை எதிர்த்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் 

தமிழ்நாடு பட்டா விவரக்குறிப்பு புத்தக விதிகள், 1987 :
விதி 3(1) - தாசில்தார் சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்களை பொருத்தமட்டில் ஒவ்வொரு உரிமையாளருக்கும், இந்த சட்டத்தின் கீழ் பட்டா விவரக்குறிப்பு புத்தகம் வழங்கப்படவுள்ளது என அறிவிப்பு வெளியிட்டு சம்பந்தப்பட்ட கிராமத்தில் தண்டோரா போட்டு அறிவிக்க வேண்டும் 

விதி 7 - பட்டா உரிமை புத்தகங்களுக்கான கட்டணம் ரூ. 20 /- ஆகும் 

விதி 13 - இந்த சட்டத்தின் கீழ் பட்டா பதிவு புத்தகத்தில் யாருடைய உரிமைகள் அல்லது பற்றுகள் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதோ அல்லது பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த நபர் தாசில்தார் கேட்டுக் கொள்வதன் பேரில் தாசில்தாரின் ஆய்வுக்காக, இச்சட்டத்தின் யாதொரு நோக்கத்திற்காக விவரங்களையும், ஆவணங்களையும் 15 நாள் கால அவகாசத்திற்குள் தாசில்தாருக்கு அளிக்க வேண்டும் 

விதி 14 - இச்சட்டத்தின் கீழ் தாசில்தார் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு எதிராக 30 நாட்களுக்குள் வருவாய் கோட்டாட்சியரிடம் முதல் மேல்முறையீடு செய்து கொள்ள வேண்டும் 

விதி 15(1) - தாசில்தார் அல்லது வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை திருத்தியமைக்க வேண்டும் என்று கோரி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் சீராய்வு மனு தாக்கல் செய்து கொள்ள வேண்டும் 

விதி 15(2) - மேற்சொன்ன கால அளவிற்குள் அந்த மனுவை, மனுதாரர் தாக்கல் செய்ய முடியாமல் போனதற்கு நியாயமான, போதுமான காரணம் உள்ளது என்று மாவட்ட வருவாய் அலுவலர் கருதினால் விதி 15(1) ல் கூறப்பட்டுள்ள கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் உத்தரவை திருத்தியமைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக்கொள்ளலாம் 

ஆட்சேபனைகளை எப்படி தாக்கல் செய்ய வேண்டும்? :
1. தாசில்தாரின் பட்டா மாற்றம் இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுப்புகள் 14 மற்றும் 21 ல் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு முரணானது 

2. இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுப்புகள் 14 மற்றும் 21 ல் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் படி பட்டா மாற்றம் செய்வதற்கு முன் ஏற்கனவே கூட்டுப்பட்டாவில் உள்ள எனக்கு நீதிக்குட்பட்டு அறிவிப்பு கொடுக்காமலும், வாய்ப்பு அளிக்காமலும் என் தரப்பு வாதத்தை கேட்காமலும் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது சட்டப்படி தவறாகும் 

3. இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுப்பு 375 ன்படி தாசில்தார் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளவற்றை மதித்து நடக்கவில்லை 

4. வருவாய் நிலை ஆணை எண் 31 ஐ பின்பற்றி பட்டா மாற்றம் செய்யப்படவில்லை 

5. தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் 1983 மற்றும் தமிழ்நாடு பட்டா விவரக்குறிப்பு புத்தக விதிகள் 1987 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை தாசில்தார் கடைபிடிக்கவில்லை 

6. தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் 1983 ன் பிரிவு 3(7) ன்படி நிலத்தில் அக்கறை கொண்டுள்ள எனக்கு முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்படவில்லை. அறிவிப்பு ஏதும் கொடுக்கப்படவில்லை 

7. தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் 1983 ன் பிரிவு 7 ல் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை தாசில்தார் பின்பற்றவில்லை 

8. தமிழ்நாடு பட்டா விவரக்குறிப்பு புத்தக விதிகள் 1987 ன் விதி 3 ன்படி சம்பந்தப்பட்ட கிராமத்தில் பட்டா மாற்றம் குறித்து அறிவிப்பு செய்யப்பட்டு தண்டோரா போடப்படவில்லை 

9. VAO வருவாய் நிலை ஆணை மற்றும் கிராம நிர்வாக நடைமுறை நூல் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை மீறி சட்ட விரோதமாக பட்டா மாற்றம் செய்ய பரிந்துரை செய்துள்ளார் 

10. இயற்கை நீதிக்கு புறம்பாகவும், சட்ட விரோதமாகவும் பட்டா மாற்றம் தாசில்தாரரால் செய்யப்பட்டுள்ளது 

(இதன் பிறகு உங்கள் சொத்து சம்பந்தப்பட்ட விவரங்களை எழுதிக் கொள்ளுங்கள்)

Thursday, January 10, 2019

தடை கோரி வழக்கு

Image may contain: text
தடை கோரி வழக்கு
பக்தவச்சலம் என்பவரும் மற்றொருவரும் ஒரு சொத்தை தனியார் நிதி நிறுவனம் ஒன்றிடம் அடமானம் வைத்து கடன் பெற்றிருந்தனர். கடன் கொடுத்த நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யாமலே அடமானச் சொத்தை விற்பனை செய்வதற்கான அதிகாரம் சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 69 ன்படி உண்டு என்று அடமானப் பத்திரத்தில் எழுதப்பட்டிருந்தது. கடன்தாரர்கள் தொகையை திருப்பி செலுத்தாததால் நிதி நிறுவனம் சொத்தை ஏலம் விட வேறொரு நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்தது.
அதன்படி சொத்து 11.7.2009 ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்பட்டது. அந்ந ஏலத்தில் ராஜேஷ் குமார் என்பவர் பங்கு கொண்டு ரூ 10,10,000/- க்கு சொத்தை ஏலம் எடுத்தார். ராஜேஷ் குமார் பெயருக்கு விற்பனை ஆவணமும் எழுதி பதிவு செய்யப்பட்டது.
அதன்பிறகு ஏலம் எடுத்த சொத்திற்கு தன்னை உரிமையாளராக அறிவிக்க கோரியும், சொத்தின் சுவாதீனத்தை பக்தவச்சலம் மற்றும் ஒருவரிடமிருந்து பெற்றுத் தரக் கோரியும் ஒரு வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். பின்னர் அந்த வழக்கில் ஒரு இடைக்கால மனுவை தாக்கல் செய்து, அதில் பக்தவச்சலம் மற்றும் ஒருவர் சட்டத்திற்கு புறம்பாக சொத்தை அனுபவித்து வருவதால் இறுதி தீர்ப்பு வரும் வரை ரூ. 25,000/- ஐ இருவரும் வழக்கு முடியும் வரை தர வேண்டும் என்று கோரினார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி, மாதம்தோறும் ரூ. 8,000/- ஐ இடைக்காலமாக மனுத்தாக்கல் செய்த நாளிலிருந்து ராஜேஷ் குமாருக்கு, பக்தவச்சலமும், மற்றொருவரும் வழங்க வேண்டும் என்றும், அந்த தொகையை 4 மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும், அதன்பிறகு தொடர்ந்து ரூ. 8,000/-ஐ வழக்கு நிலுவையில் இருக்கும் வரை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
ஆனால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் பக்தவச்சலமும், மற்றொருவரும் பணத்தை செலுத்தவில்லை. அதனால் அசல் வழக்கில் பக்தவச்சலமும், மற்றொருவரும் எதிர் கட்சி செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கோரி ராஜேஷ் குமார் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
வழக்கை நீதிபதி திரு. R. சுப்பிரமணியன் விசாரித்தார். 
ஒரு வழக்கில் பிரதிவாதி அவரது வழக்கை நடத்துவதற்கு ஒரு தடையை விதிப்பதற்கான அதிகாரம் நீதிமன்றத்திற்கு தனிப்பட்ட ஒரு சட்டப் பிரிவின் மூலமாக வழங்கப்படவில்லை என்றாலும் உரிமையியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 151 ன் கீழ் வழங்கப்பட்டுள்ள உள்ளார்ந்த அதிகாரத்தை பயன்படுத்தி, அது போன்ற ஒரு உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கலாம். எந்த சூழ்நிலையில் பிரதிவாதி தரப்பில் வழக்கை நடத்துவதற்கு ஒரு தடையை விதிக்கலாம் என்பது குறித்து உயர்நீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்புகள் கூறியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் " தசாரி வெங்டாச்சாரியலு Vs மஞ்சலா யசோபு மற்றுமொருவர் (1931-2-MLJ-477)" என்ற வழக்கில், உரிமையியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 151 ல் வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு வழக்கின் பிரதிவாதி அவரது எதிர்ப்பு வாதத்தை முன் வைப்பதற்கு தடை விதிக்கலாம் என்று கூறியுள்ளது.
அதேபோல்" R. D. இராமையா சேர்வை Vs சாமா அய்யர் மற்றும் பலர் (1946-2-MLJ-210)" என்ற வழக்கிலும் இதே கருத்தை உயர்நீதிமன்றம் தீர்ப்பாக கூறியுள்ளது.
ஆனால் இவ்வாறு ஒரு தடையை விதிப்பதற்கு, பிரதிவாதி கட்டாயமாக உத்தரவை நிறைவேற்ற வேண்டும் தவறினால் எதிர்ப்பு வாதத்தை முன் வைப்பதற்கு தடை விதிக்க நேரிடும் என்று விசாரணை நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.

A. S. NO - 1543/2018     C. S. NO - 829/2010   தேதி - 09.03.2018
S. ராஜேஷ் குமார் Vs C. பக்தவச்சலம் மற்றும் பலர்  2018-1-MLJ-411

பணியிடை நீக்கம் - காலவரையறை

Image may contain: text
பணியிடை நீக்கம்  -  காலவரையறை
செல்வமணி என்பவர் சார்பு ஆய்வாளராக 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணியில் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 1998 ஆம் ஆண்டில் ஆய்வாளராகவும், 2010 ஆம் ஆண்டில் காவல்துறை துணை கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு பெற்றார். அவர் இராயபுரம் உதவி ஆணையராகவும், தாம்பரம் உதவி ஆணையராகவும் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 2011 ஆம் ஆண்டில் மாவட்ட குற்றப் பதிவேட்டு பிரிவிலும், 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் திருச்சி மாவட்டம் லால்குடியில் காவல் துணை கண்காணிப்பாளராகவும் பணியமர்த்தப்பட்டார். அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் லால்குடி, கல்லாகுடி, கொல்லடம், சமயபுரம் மற்றும் சிறுகானூர் காவல் நிலையங்கள் இருந்தது. 
இந்நிலையில் ராஜமாணிக்கம் என்பவரிடம் ரூ. 25,000/- லஞ்சம் கேட்டதாக ஒரு வழக்கு திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு சிறப்பு ஆய்வாளரால் குற்ற எண். 11/2012 என்கிற எண்ணில் பதிவு செய்யப்பட்டது. அதனால் அவரை பணியிடை நீக்கம் செய்து G. O. 2D. 208 HOME (Pol. 2) Department என்கிற எண்ணில் ஓர் உத்தரவு 27.7.2012 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. DSP மீதான லஞ்ச குற்ற வழக்கில் இறுதியறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. 
இந்நிலையில் இந்த DSP தன்னை பணியிடை நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் W. P. NO - 21014/2013 என்ற எண்ணின் கீழ் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தார். அதனை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், DSP யை பணியிடை நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி ஒரு மனுவை அரசிற்கு அளிக்குமாறும், அதனை அரசு பரிசீலனை செய்து DSPயை அதிக முக்கியத்துவம் இல்லாத தொலை தூரத்திலுள்ள ஒரு பதவியில் நியமிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. 
அந்த உத்தரவினால் குறையுற்ற அரசு ஒரு ரிட் மேல்முறையீட்டை W. A. NO - 1552/2014 என்ற எண்ணின் கீழ் தாக்கல் செய்தது. அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் DSP தன்னை பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு ஒரு மனுவை அரசிடம் அளிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டதோடு, அந்த மனுவை இரண்டு வாரங்களில் பரிசீலனை செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. 
மேற்படி உத்தரவுபடி DSP ஒரு கோரிக்கை மனுவை தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளரிடம் 17.12.2012 ஆம் தேதி அளித்தார். அந்த மனுவை பெற்றுக் கொண்ட முதன்மை செயலாளர், DSP லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பொறி வைத்து பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வருவதால், பொது நிர்வாகத்துறையில் அவருக்கு மீண்டும் பணி வாய்ப்பு வழங்கப்பட்டால், அது மற்ற பொது ஊழியர்களின் நடத்தையை பாதிக்கும் என குறிப்பிட்டு DSP யின் கோரிக்கை மனுவை நிராகரித்து 30.12.2014 ம் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்தார். அந்த உத்தரவை எதிர்த்து DSP சென்னை உயர்நீதிமன்றத்தில் W. P. NO - 26606/2015 என்ற ரிட் மனுவை தாக்கல் செய்தார். 
DSP தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் " அம்பிகாபதி Vs இயக்குநர், மக்கள் நல்வாழ்வுத் துறை (1991-WLR-273) மற்றும் அஜய் குமார் செளத்ரி Vs யூனியன் ஆப் இந்தியா (2015-2- SCALE - 432)" ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, பணியிடை நீக்கம் உத்தரவு 3 ம மேல் நீடித்திருக்ககூடாதென்றும், அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் தவறு செய்ததாக கூறப்படும் அரசு ஊழியர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் மீது உரிய உத்தரவை பிறப்பித்து, அந்த பணியிடை நீக்கத்தை நீட்டித்திருக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் இந்த DSP யை எந்தவிதமான காரணங்களையும் குறிப்பிடாமல் பணியிடை நீக்கம் செய்து, நீண்ட காலமாக பணியிடை நீக்கத்திலேயே அரசு வைத்துள்ளது என்றும், எனவே அந்த உத்தரவை ரத்து செய்து DSP யை பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். 
DSP தரப்பு வாதத்தை கேட்ட உயர்நீதிமன்றம், இந்த ரிட் மனுவை உச்சநீதிமன்றம் " அஜய் குமார் செளத்ரி Vs யூனியன் ஆப் இந்தியா" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்க வேண்டும் என்று கூறியது. 
ஓர் அரசு ஊழியரை பணியிடை நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவானது 3 மாதங்களுக்கு மேல் நீடித்திருக்ககூடாது எனவும், அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் தவறு செய்ததாக கூறப்படும் அரசு ஊழியருக்கு அந்த குற்றச்சாட்டு சார்வு செய்யப்பட்டு, அதன் மீது உரிய உத்தரவை பிறப்பித்து, இடைநீக்கத்தை நீட்டித்திருக்க வேண்டுமென்று மேற்கண்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. 
தமிழ்நாடு அரசாங்கம் கடித எண் 13519/எண்/2016-1,P & AR (PER. N) Dept என்கிற 23.07.2015 ஆம் தேதியிட்ட கடிதத்தின் மூலம் அரசு முதன்மை செயலாளர்கள், தலைமைச் செயலகத்தில் உள்ள துறைகள் மற்றும் அனைத்து துறையினரையும் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. 
எனவே ஒரு அரசு ஊழியரை நீண்ட காலமாக எந்த காரணங்களும் இல்லாமல் பணியிடை நீக்கத்தில் வைத்திருப்பது நியாயமற்றது என்று கூறி இந்த DSP யை தொலை தூரத்தில் உள்ள அதிக முக்கியத்துவம் இல்லாத பணியில் வேலைக்கு அமர்த்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. 
W. P. NO - 26606/2015, DT - 29.9.2016 
K. Selvamani Vs Chief Secretary, Tamilnadu and DGP, 
(2017-1-CTC-795)  (2016-7-MLJ-766)

பெண்ணுக்கு திருமணத்தின்போது அளித்த சீதனப் பொருட்கள்

Image may contain: text
பெண்ணுக்கு திருமணத்தின்போது அளித்த சீதனப் பொருட்கள் பற்றி...
ஒரு பெண்ணின் சீதனப் பொருட்களை வைத்திருக்கும் கணவரோ அல்லது அப்பெண்ணின் மாமனார் வீட்டாரோ அவற்றை ஒரு டிரஸ்டி (காப்பாளர்) என்ற முறையில் வைத்திருந்து, அப்பெண் கேட்கும்போது திருப்பி கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க தவறினாலோ அல்லது தனது சொந்த உபயோகத்திற்கு எடுத்துக் கொண்டாலோ இது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 405 ன்படி 'Breach of Trust'என்ற தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும்அபராதம் விதிக்கப்படும். 
கணவன், மனைவி பிரிந்து விட்ட நிலையில் என்ன நடக்கும்? 
உச்சநீதிமன்ற நீதிபதி திரு. தீபக் மிஸ்ரா அவர்கள் கையாண்ட வழக்கு 
இந்த வழக்கில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் (கணவரை பிரிந்து வாழ்பவர்) தன்னுடைய கணவன் வசம் உள்ள சீதனப் பொருட்களை திருப்பி பெற்றுத்தருமாறு கோரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த வழக்கில் தீர்ப்பளித்த நடுவர், அந்த பெண் நீதிமன்ற உத்தரவுப்படி கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதால், அவரை Domestic Violence Act என்னும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவராக கருத முடியாது என்று கூறி அந்த பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார். 
குற்றவியல் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து திரிபுரா உயர்நீதிமன்றத்தில் அந்த பெண் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதி குற்றவியல் நடுவரின் தீர்ப்பை உறுதி செய்து மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தார். 
எனவே அந்த பெண் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டை விசாரித்த தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, நீதிமன்றத் தீர்ப்பு அடிப்படையில் பிரிந்து வாழ்வது என்பது திருமணத்தை முறித்தது ஆகாது. அந்த பெண் ஏற்கனவே துயரங்களை அனுபவித்துள்ளார். தற்போதும் தொடர்ந்து துன்பப்பட்டு வருகிறார். எனவே குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின்படி அவர் பாதிக்கப்பட்டவர் தான் என்று கூறி பெண்ணின் சீதனப் பொருட்களை கணவர் உடனடியாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

கிறிஸ்தவர்கள் சொத்துரிமைச் சட்டம்

Image may contain: text
கிறிஸ்தவர்கள் சொத்துரிமைச் சட்டம்
கிறிஸ்தவர் ஒருவருக்கு பிறந்துள்ள குழந்தைகள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், அந்த கிறிஸ்தவர் இறந்த பிறகு அவரது சொத்தில் சமமான பங்கைப் பெறுவார்கள். 
கிறிஸ்தவர் ஒருவர் இறந்த பிறகே அவரது சொத்தில் அவரது வாரிசுகள் பாகம் பெற முடியும். 
கிறிஸ்தவர் ஒருவர் இறந்த பிறகு அவரது சொத்தில் அவரது மனைவியும் மற்றும் குழந்தைகளும் பாகம் பெறுவதற்கு உரிமையுடைவர்களாவார்கள். 
கிறிஸ்தவரின் சொத்தில் அவரது பேரனும், பேத்திகளும் கொள்ளுப் பேரனும், கொள்ளுப் பேத்திகளும் கூட பாகம் பெற உரிமையுடைவர்களாவார்கள். 
கிறிஸ்தவரின் சொத்தில் தாய், தந்தை, சகோதரன், சகோதரி மற்றும் இரத்தவழி உறவினர்களும் பாகம் பெறுவதற்கு உரிமையுடைவர்களாவார்கள். 
இந்திய கிறிஸ்தவர்கள் யார்? 1. இந்தியாவை தாயகமாக கொண்டவர்கள் 
2. கலப்பில்லாததும் உண்மையிலேயே ஆசியா கண்டத்தை சேர்ந்தவர்களாகவும் இருப்பவர்கள் 
3. கிறிஸ்தவ மதத்தின் ஏதாவது ஒரு பிரிவை பின்பற்றி வாழ்ந்து வருபவர்கள் 
4. வேறு மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்தை தழுவியவர்கள் இந்திய கிறிஸ்தவர்கள் ஆவார்கள். 
ஆனால் ஆங்கிலோ இந்தியர்கள் இந்திய கிறிஸ்தவர்களாகமாட்டார்கள். 
இந்திய கிறிஸ்தவர்களுக்கிடையிலான பாகப்பிரிவினை இந்திய வாரிசுரிமை சட்டப்படி (Indian Succession Act) நடைபெறுகிறது. 
இந்திய கிறிஸ்தவர்களை பொறுத்தவரை அவர்களுக்கு மூதாதையர் வழிச் சொத்து (Ancestral Property) என்றோ, கூட்டுகுடும்ப சொத்து (Joint Family Property) என்றோ எதுவும் கிடையாது. பொதுவாக குடும்பத்திலுள்ள சொத்துக்களை பாகம் பிரித்துக் கொள்ளலாம். 
ஒரு கிறிஸ்தவ மகனின் சொத்தில் ஒரு இந்து தந்தைக்கும், ஒரு கிறிஸ்தவ சகோதரனின் சொத்தில் ஒரு இந்து சகோதரனுக்கும், சகோதரிக்கும் பங்குள்ளது.
கிறிஸ்தவர் குழந்தைகளை தத்தெடுக்க முடியாது. ஆனால் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அனுமதியோடு ஒரு குழந்தையை வளர்க்கலாம். 
வளர்ப்பு தாயை இந்திய வாரிசுரிமை சட்டம் தாயாக ஏற்றுக்கொள்வதில்லை. ஒரு இந்து தனது மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறி இறக்கும் வரை கிறிஸ்தவ மதக் கொள்கைகளை தழுவி வாழந்திருந்தாலோ அல்லது ஒருவரின் மூதாதையர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி அந்த மூதாதையரின் வாரிசும் அவர் இறக்கும் வரை கிறிஸ்தவ மதக் கொள்கைகளை ஏற்று வாழந்திருந்தாலோ அவ்வாறானவர்களின் சொத்துக்களில் ஏற்படும் பிரச்சினைகள் இந்திய வாரிசுரிமை சட்டப்படி தான் தீர்மானிக்கப்படும். 
கிறிஸ்தவ தந்தை ஒருவர் தனது சொத்து குறித்து யாருக்கும் உயில் எழுதி வைக்காமல் தனது 3 மகன்களை மட்டும் வைத்துவிட்டு இறந்துவிட்டால் அவரது சொத்துக்கள் 3 மகன்களுக்கும் சரிசமமாக போய் சேரும். 
இறந்து போன கணவருக்கு மனைவியும், குழந்தைகளும் மட்டும் இருந்தால் மனைவிக்கு 1/3 பாகமும் குழந்தைகளுக்கு 2/3 பாகமும் கிடைக்கும். 
இறந்து போன கணவருக்கு குழந்தைகள் இல்லாமல் இருக்கும் போது அவரது மனைவி 1/2 பாகத்தையும் மீதமுள்ள 1/2 பாகத்தை அவரது இரத்தவழி உறவினர்களும் அடைவார்கள். இறந்தவரின் தாய், தந்தை இரத்தவழி உறவினர்கள் ஆவார்கள். 
இறந்து போன கணவருக்கு குழந்தைகளோ, இரத்தவழி உறவினர்களோ இல்லாமல், அவரது மனைவி மட்டும் உயிருடன் இருந்தால் அந்த மனைவி முழு சொத்தையும் பெறுவார். 
கணவருக்கு குழந்தைகள் யாரும் இல்லாமல் அவரது மனைவி மட்டும் உயிருடன் இருக்கும் நிலையில் கணவரின் சொத்து மதிப்பு ரூ. 5000/-க்கு மிகாமல் இருந்தால் அந்த சொத்து முழுவதும் மனைவிக்கே போய் சேரும். 
கணவரின் சொத்து மதிப்பு ரூ. 5000/-க்கு அதிகமாக இருந்தால், ரூ. 5000/-யும் அதற்குரிய வட்டியையும் மனைவி பெற்றது போக மீதி இருக்கும் தொகையை கணவரின் இரத்தவழி உறவினர்கள் அடைவார்கள். அதாவது ரூ. 5000/- வட்டியுடன் & மேற்படி தொகை போக மீதமுள்ள தொகையில் 1/2 பாகம் மனைவிக்கு கிடைக்கும். மீதமுள்ள 1/2 பாகம் இரத்தவழி உறவினர்களுக்கு கிடைக்கும். 
இறந்து போன கணவரின் சொத்துக்களின் மொத்த மதிப்பானது இறந்த கணவர் பிறருக்கு கொடுக்க வேண்டிய கடன்கள், அவரது இறுதிக் காரியங்களுக்கான செலவுத் தொகைகள், நிர்வாகச் செலவுகள் மற்றும் அனைத்து சட்டப்படியான பொறுப்புகள் மற்றும் பற்றுகைகள் ஆகியவற்றிற்கான எல்லாத் தொகைகளும் போக மீதமுள்ள தொகையை இறந்தவரின் சொத்திற்கான மொத்த மதிப்பாக பாகப்பிரிவினையின் போது கணக்கிடப்படும். 
கணவன் வாரிசுகள் ஏதும் இல்லாமல் இறந்து போனால் அவரது சொத்துக்கள் அனைத்தும் அரசாங்கத்தை சென்றடையும்
.

காவல் நிலையத்தில் அடித்தால்?

Image may contain: text
காவல் நிலையத்தில் அடித்தால்?
காவல் துறையினர் விசாரனையின் போது காவல் நிலையத்தில் வைத்து பொதுமக்களை அடிக்கலாமா?
அப்படி அடித்தால் அவர்களின் மீது நாம் எந்த பிரிவின் கீழ் வழக்கு தொடர முடியும்??
காவல் துறையினர் மட்டுமல்ல வேற எந்த ஒரு அரசு துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் பொதுமக்களை அடிக்கும் உரிமை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லை.

குற்றம் செய்தவரை தண்டிக்கும் உரிமை நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. அவ்வாறு அடித்தால் கீழ்காணும் இந்திய தண்டனை சட்டப் பிரிவின் கீழ் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர முடியும்.
IPC – 166 : ஒருவருக்கு கேடு விளைவிக்கும் நோக்கத்துடன் சட்டத்தின் செயல்பாடுகளை மீறுதல் .
IPC – 330 : ஒப்புதலை பெறுவதற்கு தன்னிச்சையாக காயம் விளைவித்தல்.
IPC – 357 : சட்ட விரோதமாக அடைத்து வைக்க முயலும் போது தாக்குதல்.
IPC – 321 : வேண்டுமென்றே தன்னிச்சையாக காயம் விளைவித்தல்.
IPC – 322 : வேண்டுமென்றே தன்னிச்சையாக கொடுங்காயம் விளைவித்தல்.
IPC – 324 : ஆயுதங்கள் மூலம் காயம் விளைவித்தல்.
IPC – 307 : கொலை முயற்சி.
மேலும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களை அடித்தால் அது மனித உரிமை மீறல் செயலாக கருதி அவர்களின் மீது வழக்கு தொடர்ந்தால் அவர்களின் பதவி பறிபோகும் நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளது.
பதிவு செய்தவர் - கார்த்திக் ராஜா

Tuesday, January 8, 2019

காலதாமதமாக வழக்கு தாக்கல் செய்தால்....?

Image may contain: text
காலதாமதமாக வழக்கு தாக்கல் செய்தால்....?
மூக்கையா என்பவர் 31.8.1987 ஆம் தேதி பணிநீக்கம் செய்யப்பட்டார். அந்த உத்தரவை எதிர்த்து மூக்கையா திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவருக்கு சாதகமாக 16.6.2000 ஆம் தேதி ஒருதலைப்பட்சமாக பணப்பலன்கள் அனைத்தையும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பு 1.8.2000 ஆம் தேதி அரசிதழில் பிரசுரிக்கப்பட்டது. மேற்படி தீர்ப்பு 1.9.2000 ஆம் தேதிக்கு பிறகு சட்டப்படி நடைமுறைக்கு வந்துவிடும். அதாவது 30 நாட்களுக்கு பிறகு நடைமுறைக்கு வரும். இதற்கிடையில் மூக்கையா இறந்து போனார்.
இந்நிலையில் மேற்படி ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பினை ரத்து செய்யக் கோரி மின்வாரியம் 117 நாட்கள் காலதாமதமாக ஒரு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவை தொழிலாளர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதனை எதிர்த்து மூக்கையாவின் வாரிசுகள் இந்த ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
வழக்கை நீதிபதி திரு. குலசேகரன் விசாரித்தார்.
தொழில் தகராறுகள் சட்டம் பிரிவு 17(ஏ) ன் அடிப்படையில் தீர்வளிப்பு (Award) அரசிதழில் பிரசுரிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்கள் கழித்து அமல்படுத்தப்பட வேண்டும். தொழிலாளர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒருதலைப்பட்ச தீர்ப்பு 30 நாட்களுக்கு பிறகு அமலுக்கு வந்து விடுவதால் தொழிலாளர் நீதிமன்றம் தனது அதிகார வரம்பை இழந்து விடும். இது குறித்து " சங்கம் டேப் கம்பெனி Vs அன்ஸ் ராஜ் (2005-MLJ-33),(2004-5-CTC-104)" என்ற வழக்கில், தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
தொழிலாளர் நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பினை ரத்து செய்ய அதிகாரம் கொண்டது. ஆனால் பிரிவு 17(ஏ) ன்படி 30 நாட்களுக்குள் ரத்து செய்யக் கோரும் விண்ணப்பத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஏனென்றால் இந்த காலவரம்புக்குள் தான் தொழில் சம்பந்தப்பட்ட தகராறுகளை குறித்து தீர்ப்பு வழங்குவதற்கு தொழிலாளர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.
எனவே தொழிலாளர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பினை ரத்து செய்யக் கோரி 30 நாட்களுக்குள் எதிர்மனுதார்கள் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் அந்த மனுவை தொழிலாளர் நீதிமன்றம் ஏற்க முடியாது என்று தீர்ப்பு வழங்கினார்.
W. P. NO - 14752/2003
dt- 11.8.2006
சுப்புலட்சுமி மற்றும் பலர் Vs நீதிமன்ற அலுவலர், தொழிலாளர் நீதிமன்றம், திருநெல்வேலி மற்றும் ஒருவர்
2006-4-MLJ-602