Sunday, December 30, 2018

முஸ்லிம் சட்டத்தில் உயில்

Image may contain: text
முஸ்லிம் சட்டத்தில்  உயில்
 'வசிய்யத்
முஸ்லிம் சட்டத்தில் 'வசிய்யத்' என்பது உயில் அல்லது மரண சாசனம் என்று அழைக்கப்படுகிறது. கொடையாக ஒரு பொருளை கொடுக்கும் பொழுது, கொடைப் பொருள் உடனடியாக கைமாற வேண்டும். ஆனால் வசிய்யதில் கொடுப்பவர் இறந்த பின்னரே 'உயில் சொத்து' பெறுபவர் கைக்கு வந்து சேரும். சொத்து கைமாறும் பொழுது கொடுப்பவர் உயிருடன் இருப்பதில்லை. ஆனால் கொடையில் கொடுப்பவரும், பெறுபவரும் உயிருடன் இருக்க வேண்டும். 
உயில் வழிச் சொத்து
உயில் வழிச் சொத்து கொடுக்கும் பொழுது, கொடுப்பவர் இறந்திருக்க வேண்டும். அவர் இறந்த பின்னரே' உயில்' நடைமுறைக்கு வருகிறது. அப்பொழுதுதான் அச்சொத்து பெறுபவருக்கு வந்து சேரும். உயில் வழிச் சொத்து பெறுபவரை உயில்வழிக் கொடை பெறுபவர் (Legatee) என்றும், எழுதி வைப்பவரை உயில் எழுதி வைப்பவர் (Testator) என்றும் அழைக்கப்படுகிறார்கள். உயிலை எழுதி வைப்பவர் இறக்கும்வரை பெறுபவருக்கு சொத்துக்களில் எந்த உரிமையும் ஏற்படாது. உயிலை எழுதி வைப்பவருக்கு அதனை ரத்து செய்யவும் அதிகாரம் உண்டு. உயில் எழுதி வைப்பவரின் இறப்பிற்கு பின்னரே நடைமுறைக்கு வரும்.இரண்டு கட்டுப்பாடு
ஒரு முஸ்லீம் உயில் எழுதுவது இரண்டு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.
1. தன்னுடைய முழு சொத்தில் 1/3 பங்குக்கு மிகாமல் தான் உயில் எழுதி வைக்க வேண்டும். மீதி 2/3 பாகமும் வாரிசுரிமை சட்டப்படி பாகம் பிரிக்கப்பட வேண்டும். கடன், இறுதிச் சடங்கு செலவு போக மீதமிருப்பதே அவர் விட்டுச் செல்லும் சொத்தாகும்.
2. தன்னுடைய முறையான உடனடி சொத்துரிமை பெறும் வாரிசுகளுக்கு உயில் மூலமாக சொத்து ஏதும் கொடுக்கக்கூடாது.
எடுத்துக்காட்டாக மனைவிக்கோ, மகனுக்கோ கொடுக்கக்கூடாது. ஆனால் மகனின் மகனுக்கு கொடுக்கலாம். மகன் நேரடி வாரிசு என்பதால் அவருக்கு உயில் எழுத முடியாது. ஆனால் பேரனுக்கு உயில் எழுதலாம்.
உயில் எழுத்து மூலமாகவோ, வாய்மொழியாகவோ கொடுக்கலாம். எந்தவித சம்பிரதாயச் சடங்குமின்றி ஒரு முஸ்லீம் உயில் எழுதி வைக்க முடியும். இந்தியாவில் உயிலின் சட்டம் பற்றி இந்திய வாரிசுரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. முஸ்லிம்கள், முஸ்லீம் சட்டப்படி உயில் எழுதி வைக்கலாம். ஆயினும் இந்திய வாரிசுரிமை சட்டத்தில் உள்ள பிரிவுகள் 316 - 331 முஸ்லிம்களுக்கும் பொருந்தும். இந்த சட்டப் பிரிவுகள் முஸ்லிம்களை கட்டுப்படுத்தும். ஒரு முஸ்லீம் எழுதி வைக்கும் உயில், சென்னை போன்ற மாநகரங்களில் வைத்து எழுதப்பட்டால் கட்டாயம் Probate செய்யப்பட வேண்டும்.
எழுத்து மூலமாக உயில் எழுதி வைக்கும் பொழுது, முத்திரைத்தாளில் எழுதி வைக்க வேண்டியதில்லை. விரும்பினால் பதிவு செய்து கொள்ளலாம். எழுதி வைத்தாலும், பதிவு செய்தாலும் நேரில் பார்த்த சாட்சிகள் மூலமாகத்தான் உயிலை நிரூபிக்க வேண்டும். ஆவணத்தில் எழுதி இருந்தாலும் கையெழுத்திட வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில சமயங்களில் தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தும் கடிதங்களும், குறிப்புகளும் கூட உயிலாக கருதப்பட்டிருக்கிறது. உயில் எழுதப்பட்ட பின்னர், அதனை திருத்தி எழுத வேண்டும் என்று அவருடைய வழக்கறிஞருக்கு கடிதம் எழுதி இருந்தால் அதை அந்த உயிலின் இணைப்பாக கருத வேண்டும். இதை கோடிசில் (Codicil) என்கிறார்கள். இது உயிலின் ஒரு பகுதியாக கருதப்படும். உயிலில் பெறுபவர் யார் என்பதை தெளிவாக சொல்லி இருக்க வேண்டும்.

Tuesday, December 18, 2018

காசோலை வழக்கு

சந்தோஷ் என்பவர் கடனை திருப்பி செலுத்தும் விதமாக நந்தகுமார் என்பவருக்கு ரூ. 28 லட்சத்திற்கு காசோலை ஒன்றை 1.11.2013 ஆம் தேதியிட்டு கொடுத்தார். அந்த காசோலை தேதிக்கு முன்பாக ரூ. 6 லட்சத்தை சந்தோஷ், நந்தகுமாருக்கு வழங்கினார். பாக்கி ரூ. 22 லட்சத்தை சந்தோஷ் தரவில்லை. அதனால் நந்தகுமார் சந்தோஷ் கொடுத்த காசோலையை வங்கியில் செலுத்தினார். பணமில்லாமல் அந்த காசோலை திருப்பப்பட்டது. பின்னர் நந்தகுமார் பாக்கி தொகை ரூ. 22 லட்சத்தை திருப்பி தர வேண்டும் என்று கேட்டு ஒரு அறிவிப்பை சந்தோஷ்க்கு அனுப்பினார். அந்த அறிவிப்புக்கு தான் பணம் ஏதும் தர வேண்டியதில்லை என்று கூறி சந்தோஷ் பதில் அறிவிப்பு கொடுத்தார். அதனால் நந்தகுமார் ஒரு காசோலை மோசடி வழக்கை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கேரளா உயர்நீதிமன்றத்தில் சந்தோஷ் மனுத்தாக்கல் செய்தார். அதற்கு காரணமாக 6 லட்சத்தை நந்தகுமார் பெற்றுக் கொண்டிருக்கிறார். தான் வேறு பணம் ஏதும் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் நந்தகுமார் ரூ. 20 லட்சத்திற்குமான காசோலையை வசூலுக்கு தாக்கல் செய்துள்ளார். எனவே அந்த காசோலையின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்துள்ளது சட்டத்திற்கு விரோதமானது என்று கூறியிருந்தார்.
நந்தகுமார் தரப்பில், பாக்கி பணத்திற்காக தான் வழக்கு தாக்கல் செய்துள்ளோம் எனவே காசோலை மோசடி வழக்கு சட்டப்படி சரியானது தான் என்று கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி.....முன் தேதியிட்டு ஒரு காசோலை கொடுக்கப்பட்டு, அந்த காசோலை கொடுக்கப்பட்ட தேதிக்கு முன்பாக அந்த காசோலை வங்கியில் பணம் பெறுவதற்காக செலுத்தப்படும் நாளிற்கு முன்பாக, அந்த காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையில், ஒரு பகுதியை காசோலை கொடுத்தவர் அளித்துள்ள நிலையில் மீதமுள்ள தொகைக்காக அந்த காசோலையின் அடிப்படையில் மா. ஆ. ச. பிரிவு 138 ன் கீழ் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் அந்த வழக்கு ஏற்புடைய ஒன்றா? என்கிற விஷயம் குறித்து கேரளா உயர்நீதிமன்றம் " ஜோசப் சர்தோ Vs G. கோபிநாதன் மற்றுமொருவர் (2008-4-KHC-463)" என்ற வழக்கில் பரிசீலித்துள்ளது.
இந்த விஷயம் குறித்து பல முரண்பட்ட தீர்ப்புகள் இருந்தபோதிலும் ஒரு காசோலை கொடுக்கப்பட்டு, அந்த காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில், அந்த காசோலையை வங்கியில் செலுத்துவதற்கு முன்பாக காசோலை கொடுத்தவரால் ஏதேனும் தொகை அளிக்கப்பட்டிருந்தால் அந்த காசோலையில் ஒரு மேற்குறிப்பினை (Endorsement) மாற்றுமுறை ஆவணச் சட்டம் பிரிவு 56 ன் படி காசோலை கொடுத்தவர் செய்திருந்தால் மட்டுமே, அந்த காசோலையை புகார்தாரர் பணம் பெறுவதற்காக வங்கியில் செலுத்தி அந்த காசோலை திருப்பப்பட்டதற்கு பின்னர், காசோலை கொடுத்தவர் தர வேண்டிய பாக்கித் தொகைக்காக வழக்கு தாக்கல் செய்ய முடியும்.
மாற்றுமுறை ஆவணச் சட்டம் பிரிவு 56 ன்படி காசோலையை வங்கியில் செலுத்துவதற்கு முன்பாக, ஏதேனும் பணம் தரப்பட்டிருந்தால், அந்த தொகையை காசோலையில் குறிப்பிட்டுள்ள தொகையில் கழித்துக் கொண்டு ஒரு மேற்குறிப்பினை காசோலை கொடுத்தவர் செய்ய வேண்டும். அவ்வாறு ஒரு மேற்குறிப்பினை காசோலை கொடுத்தவரிடமிருந்து பெறாமல், அந்த காசோலையை வங்கியில் செலுத்தி மாற்றுமுறை ஆவணச் சட்டம் பிரிவு 138 ன் கீழ் ஒரு வழக்கை தாக்கல் செய்ய முடியாது. ஆனால் இதர சட்டங்களின் கீழ் வழக்கு தொடரலாம்.
இந்த வழக்கில் சந்தோஷிடமிருந்து, நந்தகுமார் மேற்குறிப்பு எதையும் காசோலையில் வாங்கவில்லை. எனவே காசோலை மோசடி வழக்கை நந்தகுமார் தாக்கல் செய்ய முடியாது. எனவே குற்றவியல் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்கிறேன் என நீதிபதி உத்தரவிட்டார்.
CRL. MC. No - 1545/2015
Dt - 23.11.2015
சந்தோஷ் Vs நந்தகுமார் மேனன் மற்றும் பலர்
2016-1-MWN-CRL-DCC-64

Monday, December 17, 2018

ஒருவரை அடித்து கொன்று தூக்கில் ஏற்றினால்?

Image may contain: text
தூக்கிட்டு இறந்தவர் கழுத்தில் வியற்வை காணப்படாது
கழுத்து நீண்டு காணப்படாது
தொடைகள் விறை பிடித்தாற் போல காணப்படும்
ஆண்குறி வறண்டு சுருங்கி காணப்படும்
கால் பாதங்கள் நிமிராமல் இருக்கும்
கண்விழி கீழ்நோக்கி இருக்காது
கை மடங்கி அசையும்
கண்விழி சரிந்து காணப்படாது
கால்கள் சரியாக தன்னிலை பெற்றிருக்கும்
வயிறு மேல்நோக்கி விரிவடையாது
விந்து ஆண்குறியிலிருந்து வெளியாகாது
உட்கொண்ட உணவு வாந்தி மயமாக எழும்பி சங்கை அடைத்து விடும்

Sunday, December 16, 2018

தூக்கு போட்டுத்தான் தற்கொலை செய்துள்ளாரா?

Image may contain: text
தூக்கு போட்டுத்தான் தற்கொலை செய்துள்ளார்! கண்டு பிடிப்பது எப்படி?
தூக்கிலிட்டு செத்த பிணம் இது என முடிவு செய்ய கீழேயுள்ள 40 அடையாளங்களை கவனிக்க வேண்டும்.
நாக்கு வறண்டிருக்கும். அதற்கிடையே எச்சில் நிற்கும்.
ஆண்குறி உள்ளே போய் இழுப்பட்டிருக்கும்
கண்கள் பிதுங்கி நிற்கும்
கால்கள் நிமிர்ந்து கட்டைப் போல் இருக்கும்
தொடைகளில் சிவந்த நீர் காணப்படும்
கழுத்து நீண்டிருக்கும்
பார்வை கீழ்நோக்கி இருக்கும்
ஆன்மா ஆண்குறி வழியாக பிரிந்திருக்கும்
சோரைக் காணப்படும்
காலும், கையும் சட்டுவம் போலாகித் தோன்றும்
கோழை போல ஆண்குறியிலிருந்து விந்து வெளியே வந்திருக்கும்
உடம்பு குனிந்திருக்கும்
வீரியம் அடங்கியிருக்கும்
முகம் மாறுபட்டு இருக்கும்
மலம் வெளியே வந்து விழும்
கை, கால்கள் திமிறி நிமிர்ந்து காணப்படும்
கழுத்து இழுத்தாற் போல நீண்டு விடும்
நீண்ட கழுத்தின் மேல்பக்கம் உயர்ந்த மலை போல தோன்றும்
உடல் பிசுபிசுத்துப் இருக்கும்
முத்து முத்தாக வியற்வை அரும்பி இருக்கும்
மலம் இளகி இருக்கும்
கோழை வெளிப்புறம் வடியும்
வாய் கருத்திருக்கும்
முகம் நிறம் மாறி பற்கள் நீல நிறமாக தெரியும்
கண்கள் பஞ்சமடைந்திருக்கும்
வெளியான கோழை ஒரு துர்நாற்றம் அடிக்கும்
தோள்களின் இணைப்புகள் இறங்கி இருக்கும்
தோள்களை உயர்த்தினால் மடித்தது போல பூட்டு விடும்
வயிறு தாழ்ந்திருக்கும்
உடல் சிறுத்திருக்கும்
கீழ் நோக்கிய பார்வை இருக்கும்
கழுத்தில் கயிற்றின் அடையாளம் முறுக்கி கொண்டு இருக்கும்
கால்களில் ஒன்று நீண்டு போயிருக்கும்
மேல் வயிற்றில் குடல் வலியதாக காணப்படும்
கண்கள் சிவந்திருக்கும்
நகங்கள் துடைகளில் உராய்ந்த உராய்ப்பு காணப்படும்
சங்கு பூட்டு விட்டிருக்கும்
கன்றியது போல முகம் மாறுபட்டிருக்கும்
கண்கள் பஞ்சமடைந்திருக்கும்
கயிறு பிரிகள் சுற்றி முறுக்கிக் கொண்டு இருக்கும்

Friday, December 14, 2018

பிறப்பு சான்றிதழ்களில் ஏற்படும் தவறுகளை திருத்த

Image may contain: text
Image may contain: text
பிறப்பு சான்றிதழ்களில் ஏற்படும் தவறுகளை திருத்துவதற்கு அதிகாரம்
பிறப்பு சான்றிதழ்களில் ஏற்படும் தவறுகளை திருத்துவதற்கு அதிகாரம் பெற்ற நபர் யார் என்பதை அறிந்து கொள்வதற்கு முன்பாக 1969 ஆம் ஆண்டின் பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவுச் சட்டம் மற்றும் 2000 ஆம் ஆண்டின் பிறப்பு மற்றும் இறப்பு விதிகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
பிறப்பு மற்றும் இறப்பு பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளவற்றில் திருத்தம் அல்லது ரத்து செய்வது பற்றி பிரிவு 15 கூறுகிறது.
பிரிவு 15 - 
இந்த சட்டத்தின் படி பதிவாளர் பராமரித்து வரும் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்பு அல்லது இறப்பு குறித்த விபரத்தில் தவறு அல்லது மோசடியாக அல்லது முறையற்ற வகையில் அந்தப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மனநிறைவு அடைந்தால் மாநில அரசு வகுத்துள்ள நேர்விற்கேற்ப அந்தப் பதிவுகளில் திருத்தம் செய்யவோ, அந்த பதிவை ரத்து செய்யும் விதமாகவோ அசல் பதிவில் எந்த திருத்தத்தையும் மேற்கொள்ளாமல் விளிம்புக் கோட்டில் (Margin Area) உரிய பதிவுகளை செய்து அந்த திருத்தம் அல்லது ரத்து செய்யப்பட்டுள்ள தேதியை குறிப்பிட்டு சான்று கையொப்பம் இட வேண்டும்.
பிரிவு 15(1) 
பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள விபரத்தில் எழுத்துப்பிழை அல்லது சாதாரண பிழைகள் ஏற்பட்டுள்ளது என பதிவாளர் கவனத்திற்கு கொண்டு வரப்படும் போது அல்லது வேறு ஏதாவது ஒரு வகையில் அந்த தவறு குறித்து பதிவாளருக்கு தெரிய வருகிற நிலையில் தன்னால் பராமரிக்கப்பட்டு வருகிற அந்தப் பதிவேட்டில் ஏற்பட்டுள்ள தவறுகள் குறித்து பதிவாளர் ஒரு விசாரணையை மேற்கொண்டு, அந்த தவறு நடைபெற்றுள்ளது என மனநிறைவு அடைந்தால், அந்த பதிவை பிரிவு 15 ல் கூறப்பட்டுள்ளவாறு திருத்தவோ அல்லது நீக்கவோ செய்வதோடு தகுந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அந்த திருத்தம் குறித்த பதிவேட்டின் நகலை அட்டவணையில் கட்டம் 2 ல் குறிப்பிடப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்து தலைவர், நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் போன்றவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
எனவே பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழில் திருத்தம் செய்ய வட்டாட்சியர், சார் ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், உதவி ஆணையர் ஆகியோர்களுக்கு அதிகாரம் உள்ளது.
1969 ஆம் ஆண்டின் பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவுச் சட்டத்தின் பிரிவு 15 மற்றும் 2000 ஆம் ஆண்டின் பிறப்பு மற்றும் இறப்பு விதிகளின், விதி 11 ன்படி, பதிவாளர் பிறப்பு சான்றிதழ்களில் ஏற்படும் தவறுகளை திருத்துவதற்கு அதிகாரம் பெற்றவர் ஆவார்.
இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை "W. P No - 8319/2018 ல் 11.6.2018 ல் விளக்கமாக தீர்ப்பு கூறியுள்ளது.

Friday, December 7, 2018

நிலங்களின் வகைகள் பற்றி

Image may contain: text
நிலங்களின் வகைகள் பற்றி
நஞ்சை நிலம் 
பாசன ஆதாரத்திலிருந்து சாகுபடிக்கு நீர்பெறும் உரிமைப் பெற்று நெல் போன்ற தானியங்களை விளைவிக்கக்கூடிய நிலங்களுக்கு தான் நஞ்சை நிலம் என்று பெயர். தமிழ்நாட்டில் மட்டும் 16 லட்சத்து 57 ஆயிரத்து 676 ஹெக்டேர் உள்ளது. ( 1 ஹெக்டேர் என்பது 2 ஏக்கர் 47 செண்ட்)
புஞ்சை நிலம்
பாசன வசதி இல்லாத சோளம், கம்பு, ராகி போன்ற தானியங்களை விளைவிக்கக்கூடிய மேடான நிலங்களுக்கு புஞ்சை நிலம் என்று பெயர். இந்த நிலங்கள் மழை மற்றும் கிணற்றுப் பாசன வசதிகளை நம்பிக் கூட இருக்கலாம். தமிழ்நாட்டில் மட்டும் 67 லட்சத்து 80 ஆயிரத்து 80 ஹெக்டேர் உள்ளது. ( 1 ஹெக்டேர் என்பது 10,000 சதுர மீட்டர்)
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஆற்று தண்ணீரை நம்பி இருப்பது நஞ்சை. மழையை மட்டுமே நம்பி இருப்பது புஞ்சை.
மானாவரி
மழைநீரை மட்டுமே நம்பி நெல் போன்ற தானியங்களை விளைவிக்கக்கூடிய நிலங்களுக்கு மானாவரி என்று பெயர்.
இன்னொன்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலங்களில் சாகுபடி செய்ய தகுதி வாய்ந்த நிலங்களை "தீர்வை ஏற்பட்ட தரிசு" என்றும், சாகுபடியே செய்ய முடியாத கல்லாங்குத்து, பாறைகள் போன்று இருக்கும் பகுதிகளை "தீர்வை ஏற்படாத தரிசு" என்றும் சொல்கிறார்கள்.
அதேபோல புறம்போக்கு என்றால் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலங்கள் தான். ஆனால் பொது உபயோகத்திற்கு பயன்படுத்தி கொள்வதற்காகவும், எதிர்காலத்தில் பொது விஷயங்களுக்காக தந்து விடலாம் என்ற நிலையில் இருக்கும் நிலங்களைத் தான் "புறம்போக்கு" என்கிறார்கள்.

Thursday, December 6, 2018

குற்றம் குறித்து மருத்துவமனையிலிருந்து தகவல்

Image may contain: text
குற்றம் குறித்து மருத்துவமனையிலிருந்து தகவல் வந்தால் 
காவல்துறை என்ன செய்ய வேண்டும்?
காயம்பட்டவர் குறித்து மருத்துவமனையில் இருந்து தகவல் பெற்றவுடன் காவல்துறை அலுவலர் அந்த தகவல் பெற்ற தேதி மற்றும் நேரம் குறிப்பிட்டு மருத்துவமனை தகவலில் கையொப்பம் செய்ய வேண்டும். அதில் தகவலை பெற்றுக் கொண்ட காவல் அலுவலரின் பெயர், பதவி, எண் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். 
➽ மேற்படி தகவல் பெற்ற விபரத்தை காவல் நிலைய பொது நாட்குறிப்பில் உடனே பதிவு செய்ய வேண்டும். 
➽ உடனடியாக காவல் நிலைய பொறுப்பில் உள்ள அலுவலர் மருத்துவமனைக்கு சென்று விபத்து பதிவேடு (Accident Register) நகல் பெற்று அதில் நோயாளி கூறியுள்ள விவரங்களை படித்து பார்த்து சம்பந்தப்பட்ட நோயாளியை விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்து அவரிடம் படித்துக் காட்டி கையெழுத்து பெற வேண்டும். அதன்கீழ் பதிவு செய்யப்பட்ட இடம், தேதி, நேரம் குறிப்பிட்டு பதிவு செய்த அதிகாரி கையொப்பம் செய்ய வேண்டும். 
➽ ஒருவேளை நோயாளி சுயநினைவு இல்லாமல் இருந்தால், அவரை சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்த்தவர் / உடனிருப்பவரை விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்போது பணி மருத்துவ அலுவலர் (Duty Medical Officer) அவர்களிடம் அந்த வாக்குமூலத்தில் நோயாளியின் அப்போதைய நிலையை குறித்து தெளிவாக எழுதிப் பெற வேண்டும். 
➽ மாறாக நோயாளி சுயநினைவின்றி இருக்கும்போது அவரை சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்த்தவர்கள் யாரும் இல்லாத நிலையிலும், புற நோயாளியாக சென்றிருந்தாலும் பொது நாட்குறிப்பில் பதிவு செய்து, சம்பவ இடம் சென்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
➽ காவல் நிலையம் வந்த பின்னர் வாக்குமூலத்தில் கூறியுள்ள புகார் கைது செய்வதற்குரிய குற்றமாக இருந்தால் மட்டுமே FIR பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு FIR பதிவு செய்யும் பட்சத்தில் சட்டப் பிரிவுகள், வழக்கு பதிவு செய்யும் தேதி, நேரம் ஆகியவை வழக்கு பதிவு செய்யும் அலுவலர் எழுதி கையொப்பம் செய்ய வேண்டும். 
➽ புகார் வாக்குமூலத்தை பதிவு செய்யும்போதும், எழுத்துமூலமான புகார் பெறப்படும்போதும் புகார்தாரர் சம்பவம் குறித்து ஆஜர்படுத்தும் சொத்துக்களை மகஜரில் / படிவம் 95 ல் கைப்பற்ற வேண்டும். இந்த தகவலை புகாரில் குறிப்பிட வேண்டும். 
➽ இறந்த பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் பிரேதம் தொடர்புடைய வழக்குகளில் கூடுமானவரை இறந்தவரின் உறவினர்களிடம் புகார் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும். 
➽ திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் இறந்துவிடும் பெண்கள் தொடர்பான வழக்குகளில் முடிந்தவரை இறந்துபோன பெண்ணின் பெற்றோர்களிடம் புகார் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும். 
➽ மருத்துவமனை தகவல், புகார் வாக்குமூலம் ஆகியவற்றை FIR - உடன் இணைத்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு உடனடியாக அனுப்ப வேண்டும். கைது செய்ய தேவைப்படாத குற்றமாக இருந்தால் கு. வி. மு. ச பிரிவு 155 ன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். 
➽ மருத்துவமனை தகவல் காவல் நிலையத்திற்கு கிடைக்கும் முன்பே அந்த சம்பவத்தை குறித்து காவல்துறை ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்தால், அதன்பின் பெற்ற அந்த சம்பவ தகவலின் தேதி, நேரம் குறிப்பிட்டு ஏற்கனவே வழக்கு பதிவு செய்த விவரங்களை எழுதி அந்த தகவலினை கட்ட நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். 
➽ மருத்துவமனையில் இருந்து பெறப்படும் தகவலுக்கும், புகார் வாக்குமூலத்திற்கும் முரண்பாடு இல்லாதவாறு காவல் அலுவலர் பார்த்துக் கொள்ள வேண்டும். 
➽ தகவலினை புகாருடன் சேர்த்து நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.