Showing posts with label சட்டம். Show all posts
Showing posts with label சட்டம். Show all posts

Sunday, December 30, 2018

முஸ்லிம் சட்டத்தில் உயில்

Image may contain: text
முஸ்லிம் சட்டத்தில்  உயில்
 'வசிய்யத்
முஸ்லிம் சட்டத்தில் 'வசிய்யத்' என்பது உயில் அல்லது மரண சாசனம் என்று அழைக்கப்படுகிறது. கொடையாக ஒரு பொருளை கொடுக்கும் பொழுது, கொடைப் பொருள் உடனடியாக கைமாற வேண்டும். ஆனால் வசிய்யதில் கொடுப்பவர் இறந்த பின்னரே 'உயில் சொத்து' பெறுபவர் கைக்கு வந்து சேரும். சொத்து கைமாறும் பொழுது கொடுப்பவர் உயிருடன் இருப்பதில்லை. ஆனால் கொடையில் கொடுப்பவரும், பெறுபவரும் உயிருடன் இருக்க வேண்டும். 
உயில் வழிச் சொத்து
உயில் வழிச் சொத்து கொடுக்கும் பொழுது, கொடுப்பவர் இறந்திருக்க வேண்டும். அவர் இறந்த பின்னரே' உயில்' நடைமுறைக்கு வருகிறது. அப்பொழுதுதான் அச்சொத்து பெறுபவருக்கு வந்து சேரும். உயில் வழிச் சொத்து பெறுபவரை உயில்வழிக் கொடை பெறுபவர் (Legatee) என்றும், எழுதி வைப்பவரை உயில் எழுதி வைப்பவர் (Testator) என்றும் அழைக்கப்படுகிறார்கள். உயிலை எழுதி வைப்பவர் இறக்கும்வரை பெறுபவருக்கு சொத்துக்களில் எந்த உரிமையும் ஏற்படாது. உயிலை எழுதி வைப்பவருக்கு அதனை ரத்து செய்யவும் அதிகாரம் உண்டு. உயில் எழுதி வைப்பவரின் இறப்பிற்கு பின்னரே நடைமுறைக்கு வரும்.இரண்டு கட்டுப்பாடு
ஒரு முஸ்லீம் உயில் எழுதுவது இரண்டு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.
1. தன்னுடைய முழு சொத்தில் 1/3 பங்குக்கு மிகாமல் தான் உயில் எழுதி வைக்க வேண்டும். மீதி 2/3 பாகமும் வாரிசுரிமை சட்டப்படி பாகம் பிரிக்கப்பட வேண்டும். கடன், இறுதிச் சடங்கு செலவு போக மீதமிருப்பதே அவர் விட்டுச் செல்லும் சொத்தாகும்.
2. தன்னுடைய முறையான உடனடி சொத்துரிமை பெறும் வாரிசுகளுக்கு உயில் மூலமாக சொத்து ஏதும் கொடுக்கக்கூடாது.
எடுத்துக்காட்டாக மனைவிக்கோ, மகனுக்கோ கொடுக்கக்கூடாது. ஆனால் மகனின் மகனுக்கு கொடுக்கலாம். மகன் நேரடி வாரிசு என்பதால் அவருக்கு உயில் எழுத முடியாது. ஆனால் பேரனுக்கு உயில் எழுதலாம்.
உயில் எழுத்து மூலமாகவோ, வாய்மொழியாகவோ கொடுக்கலாம். எந்தவித சம்பிரதாயச் சடங்குமின்றி ஒரு முஸ்லீம் உயில் எழுதி வைக்க முடியும். இந்தியாவில் உயிலின் சட்டம் பற்றி இந்திய வாரிசுரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. முஸ்லிம்கள், முஸ்லீம் சட்டப்படி உயில் எழுதி வைக்கலாம். ஆயினும் இந்திய வாரிசுரிமை சட்டத்தில் உள்ள பிரிவுகள் 316 - 331 முஸ்லிம்களுக்கும் பொருந்தும். இந்த சட்டப் பிரிவுகள் முஸ்லிம்களை கட்டுப்படுத்தும். ஒரு முஸ்லீம் எழுதி வைக்கும் உயில், சென்னை போன்ற மாநகரங்களில் வைத்து எழுதப்பட்டால் கட்டாயம் Probate செய்யப்பட வேண்டும்.
எழுத்து மூலமாக உயில் எழுதி வைக்கும் பொழுது, முத்திரைத்தாளில் எழுதி வைக்க வேண்டியதில்லை. விரும்பினால் பதிவு செய்து கொள்ளலாம். எழுதி வைத்தாலும், பதிவு செய்தாலும் நேரில் பார்த்த சாட்சிகள் மூலமாகத்தான் உயிலை நிரூபிக்க வேண்டும். ஆவணத்தில் எழுதி இருந்தாலும் கையெழுத்திட வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில சமயங்களில் தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தும் கடிதங்களும், குறிப்புகளும் கூட உயிலாக கருதப்பட்டிருக்கிறது. உயில் எழுதப்பட்ட பின்னர், அதனை திருத்தி எழுத வேண்டும் என்று அவருடைய வழக்கறிஞருக்கு கடிதம் எழுதி இருந்தால் அதை அந்த உயிலின் இணைப்பாக கருத வேண்டும். இதை கோடிசில் (Codicil) என்கிறார்கள். இது உயிலின் ஒரு பகுதியாக கருதப்படும். உயிலில் பெறுபவர் யார் என்பதை தெளிவாக சொல்லி இருக்க வேண்டும்.

Wednesday, December 5, 2018

இந்து வாரிசுரிமை சட்டம் , 1925

Image may contain: text
மற்ற ஊர்களைப் போல சென்னை, மும்பை, கல்கத்தா நகரங்களில் வசிப்பவர்கள் உயில் எழுத இயலாது. இவர்களுக்கு உயிலில் சில விதிவிலக்குகள் உண்டு. அதாவது வாரிசுகளுக்கு சமபங்காக பிரிக்காமல் தன்னுடைய விருப்பப்படி ஒருவர் உயில் எழுதியிருந்தால் நீதிமன்ற அனுமதியுடன் தான் உயிலை செல்லுபடியாக்க முடியும். அதேபோல் யாருக்கு உயில் எழுதி வைக்கப்படுகிறதோ அவர்கள் சாட்சிக் கையெழுத்து போடக்கூடாது. அப்படி போட்டால் அந்த உயில் செல்லுபடியாகாது.
உயில் பற்றி இந்து வாரிசுரிமை சட்டம் , 1925 கூறுகிறது.உயிலை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். வெள்ளைத்தாளில் கூட எழுதலாம். இரண்டு சாட்சிகளை வைத்துக் கொண்டு எழுதி பாக்கெட்டில் கூட வைத்துக் கொள்ளலாம். ஆனால் உயிலை பதிவு செய்து கொண்டால் பாதுகாப்பாக இருக்கும். தீர்க்க ஆலோசனை செய்த பின்னர் 20 ரூபாய் முத்திரைத்தாளில் எழுதலாம். கண்டிப்பாக முத்திரைத்தாளில் எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை. உயிலை ஒருவர் தன் கைப்பட எழுதலாம். வழக்கறிஞர்கள் மூலமாக எழுதலாம். பத்திர எழுத்தர்கள் மூலமாகவும் எழுதலாம்.
இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். ஆனாலும் அந்தந்த ஏரியாவுக்கு உட்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்வது தான் நல்லது.
உயிலை எப்ப வேணும்னாலும் ரத்து செய்து கொள்ளலாம். ரத்து செய்து விட்டு மறுபடியும் புதிதாக உயில் எழுதலாம். இறக்கும் வரை ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் உயில் எழுதலாம். ஆனால் முந்தைய உயிலை ரத்து செய்து விட்டுதான் அடுத்த உயிலை எழுத வேண்டும்.
உயிலுக்கு சாட்சிகள் தான் முக்கியம். பதிவு செய்த உயிலாக இருந்தாலும் சாட்சிகள் வேண்டும். உயில் எழுதுபவர் ஒவ்வொரு பக்கத்திலும் அல்லது இறுதியான இடத்திலும் கையெழுத்திட வேண்டும். அப்படி கையெழுத்து இல்லை என்றால் உயில் செல்லாது. குறைந்த பட்சம் இரண்டு சாட்சிகளின் கையெழுத்து பெற வேண்டும். சாட்சிகள் கையெழுத்து இல்லை என்றால் உயில் செல்லாது. சாட்சிகளின் தகப்பனார் / கணவர் பெயர், முகவரி ஆகியவற்றையும் கட்டாயம் பெற வேண்டும்.
உயிலை எழுதும் போது வருகிற சாட்சிகளே அதனை ரத்து செய்யும் போதும் வர வேண்டும் என்று அவசியம் இல்லை. புது சாட்சிகள் கையெழுத்து வாங்கி உயிலை ரத்து செய்யலாம்.
உயிலை எழுதி வைப்பவர் பிறரிடம் சொல்லாத வரை அவர் எழுதியுள்ள உயிலின் விவரம் யாருக்கும் தெரியாது. அப்படி தெரியாத போது தானாக வாரிசுகளுக்கு சொத்துக்கள் வந்து சேர்ந்துவிடும். அதனால் உயில் எழுதி வைப்பவர் நம்பிக்கையான நபர்களிடம் சொல்லி வைக்க வேண்டும். இளம் வயதுடைய ஆட்களை சாட்சிகளாக வைத்துக் கொள்ள வேண்டும். யாரிடமாவது உயில் பற்றிய விவரத்தை சொல்லி வைக்க வேண்டும். அவரிடம் உயிலின் நகலை கொடுத்து வைக்க வேண்டும். ஆனால் இதெல்லாம் நம்பிக்கையை பொறுத்தது.
உயில் எழுதி வைத்தவர் அதனை பதிவு செய்யும் முன் இறந்து விட்டால், அதனை உயிலின் படி நிறைவேற்றுபவராக அல்லது வேறு வகையாகவோ உரிமை உடையவர் அதனை எந்த மாவட்ட பதிவாளர் அலுவலகம் அல்லது சார் பதிவாளர் அலுவலகத்திலும் பதிவுக்காக தாக்கல் செய்யலாம் என பதிவுச் சட்டத்தின் விதி 69 மற்றும் பிரிவு 40 கூறுகிறது. 
பதிவு செய்யாமல் இறந்து விட்டார் என்ற காரணத்திற்கான மனுவை கொடுக்க வேண்டும். மனு கொடுப்பவரின் வாக்குமூலத்தை சார் பதிவாளர் பெற்று பின்னர் விதி 69 ன்படி விசாரணை செய்வார்.

ஊராட்சிகள் சட்டம், 1958

Image may contain: text
ஊராட்சிகள் சட்டம், 1958 
ஊராட்சி கூட்டங்களை கூட்ட ஏற்பாடு செய்வதுடன் அக்கூட்டங்களுக்கு தலைமை வகித்து நடத்துவதும் தலைவரின் கடமையாகும். ஊராட்சியில் பராமரிக்கப்படும் அனைத்து ஆவணங்களையும் எப்போதும் பார்வையிட தலைவருக்கு அதிகாரம் உண்டு. சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி அனைத்து கடமைகளையும், அதிகாரங்களையும் செயல்படுத்த தலைவருக்கு அதிகாரம் உண்டு என ஊராட்சிகள் சட்டம் பிரிவு 52(2) கூறுகிறது.
ஊராட்சி தலைவர் பதவி காலியாக இருந்தால், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில் அந்த தலைவர் பொறுப்பு முழுவதும், துணைத் தலைவரை சாரும் என பிரிவு 54(1) கூறுகிறது.
ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகள் காலியாக இருந்தாலோ அல்லது தலைவர் பதவி காலியாக இருந்து, துணைத் தலைவர் 30 நாட்களுக்கு மேல் ஊராட்சி பகுதியில் இல்லாமலிருக்கும் நிலை ஏற்பட்டாலோ அல்லது உடல்நலக் குறைவு காரணமாக 30 நாட்களுக்கு மேல் கடமையாற்ற முடியாத நிலைமையில் அவர் இருந்தாலோ, ஊராட்சி மன்றத் தலைவரின் பொறுப்பையும், கடமையையும் மீண்டும் தலைவரோ, துணைத் தலைவரோ ஏற்றுக் கொள்கின்ற வரையிலும் சம்மந்தப்பட்ட கோட்டாட்சியர் அந்தப் பொறுப்புகளை ஏற்று நிறைவேற்ற வேண்டும் என பிரிவு 54(2) கூறுகிறது. அந்த சமயங்களில் கோட்டாட்சியரே ஊராட்சியின் தலைவராக கருதப்படுவார்.
ஊராட்சி மன்ற தலைவர் தனது பொறுப்புகளில் சிலவற்றை தனது விருப்பத்தின் பேரில் துணைத்தலைவர் வசம் எழுத்து மூலமாக ஒப்படை செய்யலாம். ஆனால் ஏதாவது பொறுப்பினையோ, அதிகாரத்தினையோ விட்டுக் கொடுக்க முடியாது என்று ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தால் துணைத் தலைவர் வசம் ஒப்படைக்க முடியாது என பிரிவு 54(4) கூறுகிறது.
ஊராட்சி மன்ற தலைவர் 30 தினங்களுக்கு மேல் தொடர்ச்சியாக ஊராட்சி பகுதியில் இல்லாமல் இருந்தாலோ அல்லது உடல்நலக்குறைவு காரணமாக 30 தினங்களுக்கு மேல் கடமையை செய்ய முடியாத நிலைமையில் இருந்தாலோ அப்போது அவர் பொறுப்பும், கடமையும் துணைத் தலைவரை சாரும் என பிரிவு 54(5) கூறுகிறது.
ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவி காலியாக இருந்தாலோ, 30 தினங்களுக்கு மேல் அவர் ஊராட்சி பகுதியில் இல்லாமல் இருந்தாலோ அல்லது உடல்நலக்குறைவு காரணமாக 30 தினங்களுக்கு மேல் தனது கடமையை செய்ய முடியாத நிலையிலிருந்தாலோ தலைவர் தமது அதிகாரங்களில் சிலவற்றை ஏதாவது ஒரு உறுப்பினர் வசம் ஒப்படைக்கலாம். அவ்வாறு அதிகாரம் பெறும் உறுப்பினர் " தலைவர் டெலிகேட்" என்று அழைக்கப்படுவார் என பிரிவு 54(6) கூறுகிறது.