Tuesday, February 12, 2019

கோர்ட்டில் போலியாவணம் தாக்கல்! யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

கோர்ட்டில் போலியாவணம் தாக்கல்! யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?
பிரியங்கா என்பவர் மீது விஜய் என்பவர் ஒரு காசோலை மோசடி வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் X என்பவர் தனக்கு சொந்தமாக விவசாய நிலங்கள் இருப்பதாக கூறி, அதற்கான ஆதாரங்களை சமர்பித்து பிரியங்காவிற்கு பிணையதாரராக இருந்து ஜாமீன் வழங்கினார்.
அதன்பிறகு விஜய் பிணையதாரரான X ஐ பற்றி விசாரித்துள்ளார். அப்பொழுதுதான் X க்கு எந்த சொத்தும் இல்லை என்ற விபரமும், அவன் போலியாக சொத்து சம்மந்தப்பட்ட ஆவணங்களை தயார் செய்து இருப்பதும் தெரிய வந்தது. மேலும் இதே மோசடி ஆவணங்களை வைத்து வேறோரு வழக்கிலும் பிணையம் கொடுத்திருப்பது தெரிய வந்தது.
அதனால் பாதிக்கப்பட்ட விஜய், பிரியங்கா மற்றும் X ஆகிய இருவரும் சேர்ந்து கூட்டுசதி செய்து மோசடி ஆவணங்களை தயார் செய்துள்ளதாக கூறி குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்க கோரி ஒரு தனிநபர் புகாரை தாக்கல் செய்தார். அந்த மனுவை பெற்றுக் கொண்ட நீதிபதி அதனை விசாரணைக்காக காவல்துறைக்கு அனுப்பி வைத்தார். அதனை விசாரித்த காவல் ஆய்வாளர், பிரியங்காவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதிபதி பிரியங்காவை ரிமாண்ட் செய்ய மறுத்ததோடு, FIR யும் ரத்து செய்து, எதிரிகளை விடுதலை செய்தும் உத்தரவிட்டார். தனது உத்தரவுக்கு காரணமாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 195 ன் கீழான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு நீதிமன்றமோ அல்லது அதன் அலுவலரோ காவல்துறையில் ஒரு புகாரை கட்டாயம் அளித்திருக்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் அவ்வாறு எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.
(பிரிவு 195 - பொது ஊழியரின் சட்டப்பூர்வமான அதிகாரத்தை அவமதித்தற்காகவும், பொது நீதிக்கு விரோதமான குற்றங்களுக்காகவும், சாட்சியத்தில் தரப்படும் ஆவணங்கள் தொடர்பான குற்றங்களுக்காகவும் வழக்கு தொடுத்தல்)
மேலே கண்ட உத்தரவை எதிர்த்து விஜய் பாம்பே உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்சநீதிமன்றம் " பால்சிங் மார்வா Vs மீனாட்சி மார்வா" (2005-4-SCC-370)" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை சுட்டிக்காட்டி, நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஒரு வழக்கில் ஏற்கனவே சான்றாவணமாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில், அந்த ஆவணம் நீதிமன்றத்தின் பொறுப்பில் இருக்கும் நிலையில், அந்த ஆவணத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால் தான் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 195 ல் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் பொருந்தும். ஒரு ஆவணம் நீதிமன்றத்தில் சான்றாவணமாக குறியீடு செய்யப்படுவதற்கு முன்பு மோசடியாக தயாரிக்கப்பட்டதாக இருந்தால் அதுகுறித்து நீதிமன்றம் புகார் அளிக்க தேவையில்லை. அதனால் பாதிக்கப்பட்ட தனிநபர் ஒரு புகாரை தனிப்புகாராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்.
எனவே இந்த வழக்கில் நீதித்துறை நடுவர் பிறப்பித்த உத்தரவு தவறானது. எதிரிகள் மீது வழக்கே இல்லாத நிலையில் எப்படி நடுவர் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார் என்று தெரியவில்லை. ஆகையால் குற்றவியல் நடுவர் பிறப்பித்த உத்தரவு அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. காவல்துறை தொடர்ந்து இந்த வழக்கில் புலன் விசாரணையே மேற்கொள்ள வேண்டும் என்று உய‌ர் நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு பிறப்பித்தது.
Criminal Appeal No - 1401/2011
Vijay Vs State of Maharastira and others
2013-2-CRIMES-BOM-296

Monday, February 11, 2019

சான்றாவணங்கள் குறியீடு

Image may contain: text

அசல் ஆவணங்களின் புகைப்பட நகல்களை சான்றாவணங்களாக ஏற்றுக்கொள்ளக்கூடாது எனவும், புகைப்பட நகல்கள் பொதுவாக அசல் ஆவணங்களோடு ஒத்துப் போவதில்லை எனவும் கீழ்கண்ட வழக்குகளில் தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளது. 

சிறப்பு வட்டாட்சியர், பொன்னேரி வட்டம் Vs K. லீலம்மாள் மற்றும் பலர் (2000-1-LW-402)
தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன் Vs N. சுவாமிநாதன் மற்றும் பலர் 
(2002-4-LW-147)
மீனாட்சியம்மாள் மற்றும் பலர் Vs கோபால கிருஷ்ணன் மற்றும் பலர்
(2004-3-CTC-481)
பொன்னம்பலம் Vs பிச்சை
(2008-2-LW-809)
மேலும் உச்சநீதிமன்றம் "ஷாலிகுமார் கெமிக்கல்ஸ் குவார்ட்ஸ் லிமிடெட் Vs சுரேந்திரா ஆயில் அண்ட் டால் மிக்ஸ்" என்ற வழக்கில், பதிவுச் சான்றிதழின் புகைப்பட நகல்களை சான்றாவணங்களாக குறியீடு செய்வதற்கு பிரதிவாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், விசாரணை நீதிமன்றம் அந்த புகைப்பட நகல்களை சான்றாவணங்களாக குறியீடு செய்வதற்கு அனுமதி அளிக்கக்கூடாது, மறு தரப்பினர் புகைப்பட நகல்களை சான்றாவணங்களாக குறியீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும் நீதிமன்றம் புகைப்பட நகல்களை சான்றாவணங்களாக குறியீடு செய்ய அனுமதிக்க கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
எனவே நீதிமன்றத்தில் ஆவணத்தின் புகைப்பட நகல்களை சான்றாவணங்களாக குறியீடு செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRP. NO - 1963/2013  dt - 1.6.2017
அவனி Vs சோமசுந்தரம் மற்றும் பலர்
2017-3-TNCJ-241